பெற்றோர்களின் பெருங்கனவு பிள்ளைகளின் கல்யாணமாகத்தான் இருக்கும். வாரிசுகளுக்கு நல்லபடியே கல்யாணம் செய்து வைத்து விட்டால், பெரும் கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தி அவர்களுக்கு. ஆனால், குறிப்பிட்ட சிலருக்குக் கல்யாணம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கான காரணங்களில் குறிப்பிடத்தக்கது செவ்வாய் தோஷம்! ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன? பழம்பெரும் ஜோதிஷ நூல்கள் என்ன சொல்கின்றன தெரியுமா? பூர்வஜென்ம வாசனையே இந்தப் பிறவியின் பலா பலன்களுக்குக் காரணம் என்கின்றன. ஆக, முற்பிறப்பில் செய்த பாவ- புண்ணியங்களுக்குத் தகுந்த பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்பவே, ஒருவனின் பிறப்பு காலத்துடன் இணைகிறது. அப்போதைய கிரகங்களின் நிலைகள். அவன் இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டிய பலன்களை தரத் தகுந்தவாறு அமைந்திருக்கும். செவ்வாய் தொஷம் போன்றவையும் அப்படித்தான். பூர்வ ஜென்மத்தில் பெற்றோரைச் சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாதவர், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்கின்றன ஜோதிட நூல்கள். ஆக, அவர்கள் பிறக்கும்போது லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் செவ்வாய் கிரகம் அமைந் திருக்கும். அப்படி அமைந்திருந்தால் அது செவ்வாய் தோஷம். சரி, செவ்வாய் தோஷம் கல்யாணத்துக்கு மட்டும்தானா? வேறு விஷயங்களிலும் பாதிப்புகள் உண்டாகுமா? செவ்வாய் எந்த இடத்தில் அமர்ந்துள்ளாரோ, அதற்கேற்ப தோஷ பாதிப்புகள் உண்டாகலாம். 2-ல் செவ்வாய்: தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாகத் திகழ்வது இரண்டாவது இடம். அதில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்பத்துக்கு உரிய இடமாகவும் இது வருவதால், குடும்ப ஒற்றுமையைக் கெடுப்பதாகவும் அமையும். மனைவியிடமும், மனைவி வழி உறவுகளிடமும் பேச்சாலேயே பிரச்னையை உண்டாக்குவார். 4-ல் செவ்வாய்: 4-ஆம் இடம் என்பது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும். 7-ல் செவ்வாய்: ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை மட்டுமல்லாது, கூட்டு வியாபாரத்தை விவரிக்கும். இதில் செவ்வாய் இருந்தால், வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டியாகவே பேசிக்கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. பொதுவாகவே ரத்தம், விந்து, வீர்யம், மர்ம ஸ்தானத்துக்கு உரியவராகச் செவ்வாய் வருகிறார். மர்ம ஸ்தானத்தின் இயல்பு மற்றும் இயக்க நிலைகளை நிர்ணயிக்கும் பங்கு செவ்வாய்க்கு உண்டு. எனவேதான் திருமணத்தின்போது அத்தனை முக்கியத்துவம் கொடுத்து இந்தத் தோஷத்தைப் பார்க்கிறார்கள். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அறிவுப் பசி, உடற்பசியோடு வயிற்றுப் பசியும் கூடுதலாகவே இருக்கும். இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது. 8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். நிலையாமைக்கு உரியது 8-ஆம் இடம் என்பதால், வாழ்வில் ஸ்திரத் தன்மை இருக்காது. 12-ல் செவ்வாய்: இந்த இடம் அயன, சயன, சுக ஸ்தானத்துக்கு உரியது. இதில் செவ்வாய் அமரும்போது, நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேசவிடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர். செவ்வாய் பகவான் ஆக, கல்யாணத்தில் மட்டுமல்ல செவ்வாய் இருக்கும் இடத்துக்கு ஏற்ப மேற்சொன்ன விஷயங்களிலும் பாதிப்புகள் உண்டாகலாம் என்கின்றன ஜோதிட நூல்கள். செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் ஆலயம்: நெய் தீபம் இட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்! செவ்வாய் தோஷம் வலு குறைவது எப்போது? செவ்வாய் தோஷம் சில தருணங்களில் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும். எந்தெந்த ராசியினருக்குக் கூடுதல் கவனம் தேவை? இனி, எந்தெந்த ராசிக்கு செவ்வாய் தோஷ பாதிப்பு எப்படி- எந்த அளவுக்கு அமையும் என்பதைப் பார்ப்போம். மிதுன ராசிக்கு சங்கடங்களைத் தரும் சத்ரு ஸ்தானாதிபதியாக செவ்வாய் வருகிறார். கன்னி ராசிக்கு அவர் அஷ்டமாதிபதி. மகரத்துக்கு பாதகாதிபதி. கும்ப ராசிக்காரர்களுக்கு முடக்கிப் போடும் பகையாளிகளாகத் திகழ்பவர். ஆகவே, இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் செவ்வாயின் நிலையைப் பார்க்க வேண்டும். `மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய்தான் அதிபதி. அனுஷ நட்சத்திரத்தை எந்த தோஷமும் பாதிக்காது. ஆகவே, இவர்களுக்கெல்லாம் தோஷம் ஒன்றும் செய்யாது’ என்றொரு கருத்து உண்டு. ஆனால் உண்மை அப்படி அல்ல! எந்த நட்சத்திரக்காரராக இருந்தாலும், செவ்வாய் தோஷம் இருப்பின், அது தன் வேலையைக் காட்டத்தான் செய்யும். சரி. இந்தத் தோஷத்துக்குப் பரிகாரம்தான் என்ன. தெரிந்துகொள்வோமா? செவ்வாய் தோஷ பாதிப்புகள். செவ்வாய் தோஷம் - பரிகாரங்கள் 1. செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது. 2. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது. 3. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள (நிலம், சகோதரர்கள் முதலான.) விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும். 4. இயன்ற வரையிலும் ரத்த தானம் செய்யுங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். 5. பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகளையும் பெற்றோரையும் ஏமாற்றி அபகரிக்க முயற்சிக்காதீர்கள். 6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தாங்கள் முதன்முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டிய கட்டடமாக வாங்குவது சிறப்பு. 7. நிறுவனத்தை நடத்துபவராக இருந்தால், தொழிலாளியின் வியர்வை காய்வதற்கு முன்பே கூலியைத் தந்துவிடுங்கள். 8. ஊர்க் காவல் முதல் ராணுவம் வரையிலும் காவல் பணியை ஆட்டுவிப்பது செவ்வாய்தான். எனவே, ராணுவம், போலீஸ் என காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவி செய்வதும் நன்று. 9. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்தி மற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். 10. வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அனுதினமும் முருகப்பெருமானை வழிபட, அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்க்கை செம்மையுறும்! விழுப்புரம் மாவட்டம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் காரிய ஸித்தி அருளும் விளக்குபூஜை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/astrology/is-impact-of-sevvai-dosham-limited-only-to-marriage-other-aspects-to-consideration




