சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருப்பதால், ரூ.72,000 கோடி அளவுக்கு பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிக் கிடப்பதாகவும், அந்தத் தடையை அரசு நீக்க வேண்டும் என்றும் கிரடாய் எனப்படும் ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரம் என்ற இனிப்பு பூசி முன்வைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை சூறையாடக் கூடிய இந்த நச்சுக் கோரிக்கை மிகவும் ஆபத்தானதும், கண்டிக்கத்தக்கதுமாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பள்ளிக்கரணையொட்டிய பகுதிகளில் சதுப்பு நிலங்களும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது அடுக்குமாடி வீடுகளைக் கட்டி பொருளாதார நடவடிக்கைகளை பெருக்க வேண்டுமா? என்று கேட்டால், முதல் வாய்ப்பைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகில் சில விஷயங்களை பொருளாதார அளவு கோல் கொண்டு அளவிட முடியாது; அவற்றில் முதன்மையானது சுற்றுச்சூழல் ஆகும். அதுமட்டுமின்றி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது இப்போதுள்ள வெறும் 1725 ஏக்கர் சார்ந்த ஒன்றல்ல. ஒட்டுமொத்த சென்னையையும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் இயற்கை அரணாக அது செயல்பட்டு வருகிறது; அது சீரழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட இடம் ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக இப்போது 1725 ஏக்கராக சுருங்கிவிட்டது. கடந்த பல பத்தாண்டுகளாகவே இந்த சீரழிவு தொடர்ந்து வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும்; ராம்சர் தளங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2003-ஆம் ஆண்டு பள்ளிக்கரணை முதல் சோழிங்கநல்லூர் வரை மிதிவண்டி பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகும் பா.ம.க.வும், பசுமைத் தாயகம் அமைப்பும் தொடர் இயக்கங்களை மேற்கொண்டதன் பயனாகவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக 2022 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. ஈரநிலங்கள் ஆணையம் தமிழ்நாடு அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 (The Wetlands (Conservation and Management) Rules, 2017) சதுப்புநிலங்களை பாதுகாப்பதற்காக அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு அறிவிக்கையாக வெளியிடப்பட வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் எல்லைகளையும், தாக்கப்பகுதிகளையும் வரையறுத்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டியது அதை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஈரநிலங்கள் ஆணையத்தின் கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் அந்தப் பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தடை செய்யப்படும். ஆனால், இந்தக் கடமைகள் எதையும் தமிழக அரசும், ஈர நிலங்கள் ஆணையமும் செய்யவில்லை. இன்னொருபுறம், இஸ்ரோ அமைப்பின் SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழகத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவையும் அரசு செயல்படுத்தவில்லை. அதற்கு காரணம், தங்களுக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் உள்ளிட்ட அனைத்து ஈர நிலப் பகுதிகளிலும் கட்டுமானப் பணிகள் தொடர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தது தான். அதனால் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் ரூ.2000 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு திமுக அரசு அனுமதி அளித்தது. சென்னையின் அடையாளம் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈர நிலங்களும் இயற்கை நமக்கு அளித்த கொடை ஆகும். பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சென்னை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மிகச்சிறந்த வடிகாலாக திகழ்ந்தது தான். அதை பாதுகாப்பதற்கு பதிலாக ஆக்கிரமிக்க அனுமதித்ததன் விளைவு தான் 2005, 2015, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது ஆகும். எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் திறன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு உண்டு. அதை பாதுகாக்க வேண்டும். சென்னையின் அடையாளமாக திகழ்ந்த 250 ஏரிகள் குடியிருப்புகளை கட்டுவதற்காக அழிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இத்தகைய சூழலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மீதமுள்ள பகுதிகளையும் பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் சூறையாட அனுமதிக்கக் கூடாது. பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலம் என்பதற்காக மட்டுமல்ல. அது சென்னைக்கு இயற்கை கொடுத்த ஆகச்சிறந்த வடிகால் என்ற வகையிலும் அதை நாம் பாதுகாக்க வேண்டும். பறவைகள் வாழிடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது சிறந்த பறவைகள் வாழிடமாகவும் திகழ்கிறது.பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு ஆகிய அனைத்து தீமைகளும் இருந்தாலும் கூட அவற்றை சகித்துக் கொண்டு யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட 115 வகை பறவைகள் லட்சக்கணக்கில் இந்த சதுப்பு நிலங்களுக்கு வலசை வந்து செல்கின்றன. அதுமட்டுமின்றி, தனித்துவமான இறால் வகைகள், குள்ள கவுராமி (Dwarf Gourami)), பாப்பான் (Chromide) உள்ளிட்ட 46 வகையான மீன்கள், 5 வகை ஒட்டு மீன்கள், 21 ஊர்வன வகைகள், 9 வகையான ஒட்டு மீன்கள் ஆகியவையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன. வணிகம் என்ற பெயரில் இவற்றை அழிக்க அனுமதிக்கக் கூடாது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் மீட்டெடுக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாத்தே தீர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும்; அதுமட்டுமின்றி, அதை சென்னை இரண்டாவது பெருந்திட்டத்தில் சேர்க்க வேண்டும்; அதன் மூலம் அப்பகுதியில் நிகழ்த்தப்படும் கட்டுமானங்களையும், ஆக்கிரமிப்புகளையும் தடுக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு தமிழ்நாட்டில் உள்ள 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளையும் வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pallikaranai-swampland-should-not-be-allowed-to-be-plundered-anbumani-insists




