சென்னை, நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;- நிரந்தரத் தீர்வு வேண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அரசு வெளியிடும் அறிவிப்புகள் வெறும் காகித அறிவிப்புகளாக இல்லாமல், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், மாவட்ட அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நவீனப்படுத்த வேண்டும். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை, சென்னைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத அளவுக்கு மாவட்ட அளவிலேயே மருத்துவக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வெளிப்படையான கொள்முதல் மற்றும் விநியோக நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். இலவச மருத்துவம் என்ற அரசின் கொள்கை, நோயாளிகள் மருந்துகளை வெளியில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதபோதுதான் முழுமை பெறும். போதைப்பொருள் பிரச்சினை மாணவர்களை அச்சுறுத்தும் போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொள்ள, சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, சுகாதாரம், காவல்துறை மற்றும் சமூக நலத்துறைகள் இணைந்த நிரந்தர முன்தடுப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். முதியோர் மருத்துவப் பாதுகாப்பிற்காக, மொபைல் மருத்துவச் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு, அரசு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் பின்தங்கியப் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை வருவாய்த் துறையில், பல ஆண்டுகளாக பட்டா கேட்டுக் காத்திருக்கும் மக்களின் விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மையில் நிவாரணம் வழங்குவது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது. மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, வடிகால், நீர்வழித்தடம் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பேரிடர் ஏற்பட்டவுடன் மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல், மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும் நிரந்தர நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். ஆண்டறிக்கையை வெளியிட வேண்டும் அரசுத் திட்டங்களின் செயல்திறனை மக்கள் அறியும் வகையில், சுகாதாரத் திட்டங்கள், பணியாளர் நியமனங்கள், நோயாளிகளுக்கான சேவைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்த ஆண்டறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மானியக் கோரிக்கை என்பது துறைகளின் வரவு செலவுக் கணக்கை வாசிக்கும் நிகழ்வாக மட்டும் இருக்கக் கூடாது. மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான செயல்திட்டமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் உள்ளனரா? மாணவர்கள் போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா? ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு பட்டா கிடைக்கிறதா? பேரிடர் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்க அரசு தயாராக உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கான நடைமுறைத் தீர்வுகள்தான் மானியக் கோரிக்கைகளின் வெற்றியை அளவிடும் அளவுகோல் ஆகும். எனவே, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகளில் மக்கள் நலனுக்கான முக்கியத் தேவைகள் விடுபடாமல், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, செயலாக்கக் காலக்கெடு மற்றும் பொறுப்புக்கூறல் முறையைத் தமிழ்நாடு அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/velmurugan-has-also-raised-the-question-what-is-the-benefit-of-the-demand-for-grants




