ராசி - நட்சத்திர அடிப்படையில் நமக்கான எண்ணை கண்டறிவது எப்படி? உங்கள் ராசியையும் பிறந்த நட்சத்திரத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக. ஒருவருக்கு சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேஷத்திலிருந்து எண்ணினால், சிம்மம் 5-வது ராசி. அசுவினி முதல் எண்ணி வர மகம் 10-வது நட்சத்திரம். இப்போது ராசி எண்ணையும் நட்சத்திர எண்ணையும் பெருக்கினால் வருவது 5 x 10 = 50. இதை 5+0 என்று கூட்டினால் வருவது 5. இதுவே இந்த அன்பருக்கான எண். இப்படி ராசி மற்றும் நட்சத்திரத்தைக் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஆதார எண்ணைத் தெரிந்துகொள்ளலாம். இனி அந்த எண்களுக்கான பலனை அறிவோம். சித்தர்களும் எண்களும் எண் - 1: இந்த எண், ஒருவரின் ஆதார எண்ணாக இருந்தால், இவர்களை ஆள்பவர் சூரியன். ஆளுமைத் திறனும் தலைமை தாங்கும் சக்தியும் உண்டு. தன்னம்பிக்கை, தைரியம், நியாய உணர்வு கொண்டவராக இருப்பார். சுதந்திர உணர்வு உடையவர்கள். கோபமும், அதே நேரம் நல்ல குணங்களும் இருக்கும். தீவிர தெய்வபக்தியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். எண் - 2: இவர்களின் அதிதேவதை அம்பாள். இவர்கள் இனிமையானவர்கள். இவர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். வேகமாகச் செயலாற்றும் தன்மை இவர்களிடம் உண்டு. நட்பு, பாசம் மிகுந்தவர்கள். மென்மையானவர்கள்; சட்டென உணர்ச்சிவசப்படுவார்கள். துன்பம் வந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். எண் - 3: ராசி நட்சத்திரப்படி எண் 3 வருகிறது எனில், நவகிரகங்களில் புதன் இந்த எண்ணுக்கு அதிபதி. இந்த எண் காரர்கள் ஞானத்தில் சிறந்தவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அதுபற்றிய முழுமையான தகவலை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இவர்களின் ஆலோசனையைப் பெற மற்றவர்கள் காத்திருப்பார்கள். அதேநேரம் இந்த எண் காரர்கள், சுகமான வாழ்வை விரும்புகிறவர்கள். ஆடை- அலங்காரத்தில், தோற்றத்தில் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். வீண் செலவுகளையும் விவாதங்களையும் தவிர்த்தால், வாழ்வு குதூகலமாக இருக்கும். எண் - 4: ராசி-நட்சத்திரப்படி எண் நான்கு வருகிறது எனில், குறிப்பிட்ட அன்பர்கள் எதன் பொருட்டும் குறுக்குவழியில் செல்லாதவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளைமிகச் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். மாற்றுக்கருத்து உடைய நண்பர்களிடமும் நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ள விரும்புவார்கள். உண்மை பேசுதல், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு வாழ்வது இவர்களின் லட்சியமாக இருக்கும். மிகவும் நம்பகமானவர்கள், உழைப்பாளிகள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். ஒழுக்கம் தவறாமல் உழைத்து, உயர்பவர்கள் இவர்கள். எண் - 5: ஆன்மிகத்தில் ஐந்து என்ற எண் சிறப்பு பெறும். ராசி-நட்சத்திரப்படி ஆதார எண் 5 என்று வருகிறது எனில், குறிப்பிட்ட அன்பர்கள் சமயோசித புத்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். பஞ்ச பரமேஸ்வரர், பஞ்ச பூதங்கள், பஞ்சேந்திரியங்கள், பஞ்சலோகம் என 5-ம் எண்ணின் மகத்துவம் அமைகிறது. இதனை ஆளும் கிரகம் செவ்வாய். பல்துறைத் திறமை, சொல்வன்மை ஆகியவை இவர்களின் குணாதிசயங்கள். அதேநேரம் கோபதாபம், பிடிவாதம் ஆகியவை மிகுதியாக இருக்கும். சொந்த உழைப்பால் பொருளீட்டி உயர்நிலை அடைவார்கள். மகா கணபதியும், முருகப்பெருமானும் இவர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் தேவர்கள். செவ்வாய்க் கிழமைகளில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நலம். விசேஷ எண்கள் எண் - 6: இதனை ஆளும் தெய்வம் முருகன். ஒருவரின் எண் 6-ஆக இருந்தால், அவர் நல்லவர்; பொறுமைசாலி; தர்ம சிந்தனை உள்ளவர்; உழைப்பில் நம்பிக்கை மிகுந்தவர். கோபப்படும் இயல்பு கொண்டவராக இருந்தாலும், ‘ஆறுவது சினம்’ என்ற தத்துவத்திலும் நம்பிக்கை உள்ளவராகத் திகழ்வார். நடுத்தர வயதில் நிறையச் சம்பாதித்து, சௌபாக்கியமாக வாழ்வார். எண் - 7: எனில், ஆன்ம பலம் மிகுந்தவர்கள் எனலாம். ஏழு என்பதும் சிறப்பான எண். ஏழு கடல்கள், ஏழு மலைகள், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள் என்று 7-ம் எண் இயற்கையோடு ஒன்றிவிடுகிறது. சந்திரனும் சூரியனும் இந்த எண்ணை ஆள்பவர்கள். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் நம் மனத்தையும், சூரியன் நம் ஆன்மாவையும் ஆள்பவர்கள். எனவே, 7-ம் எண் உடையவர்கள், தங்கள் மனதால் விரும்பியதை ஆன்ம பலத்தால் அடையும் ஆற்றல் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். அபார தன்னம்பிக்கை உள்ளவர்கள். நிதானத்துடன், சிந்தித்து முடிவெடுத்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் உயரலாம். எண் - 8: எண்களில் தனித்துவம் பெற்றது, 8ம் எண். அஷ்டமி திதியைக் குறிக்கும். ‘ஜன்மாஷ்டமி’ என்று கிருஷ்ணன் பிறந்த நாளைக் கொண்டாடு கிறோம். ‘துர்காஷ்டமி’ என்று அம்பாளை பூஜிக்கிறோம். எட்டு திசைகள், எண்திசைக் காவலர்கள் என்று எட்டின் சிறப்பு நீள்கிறது. 8- ம் எண் பெற்றவர்கள் சுயதொழில், வாணிகம், அரசியல் போன்ற துறைகளில் வெற்றி பெறுவார்கள். இவர்கள் குலந்தெய்வத்தைப் போற்றி வழிபடுவது சிறப்பு. தினமும் நெய்தீபம் ஏற்றி வணங்கிவந்தால் அனைத்துவிதமான நன்மைகளும் கைகூடும். எண் - 9: எண்களில் விசித்திரமானது 9. இந்த எண்ணை மற்ற எந்த எண்ணால் பெருக்கினாலும், கிடைக்கும் விடையில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் 9-தான் வரும். இது ஒரு ஸ்திர எண் (Stable Number). இந்த எண்ணைக் கொண்டவர்கள், ஆழ்ந்த அறிவும் உயர்ந்த சிந்தனைகளும் மிக்கவராகத் திகழ்வர். சிந்தித்துச் செயலாற்றி சாதிப்பார்கள். மனித நேயமும், தர்ம சிந்தனையும் உடையவர்கள். இவர்கள் விநாயகரை வழிபடலாம். இயன்றபோதெல்லாம் திருக்கோயில் உழவாரம் போன்ற பணிகளில் பங்கேற்பது சிறப்பு. அதேபோல், பிரதோஷ வழிபாடுகளுக்கு இயன்ற பங்களிப்பை வழங்கி வழிபடுங்கள்; முன்னேற்றம் தேடி வரும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/astrology/your-lucky-number-and-predictions-based-on-your-rasi-natchathiram




