வணிக முக்கத்துவம் வாய்ந்த நெல்லை டவுன் பகுதியில் இன்று இரட்டைக் கொலை நடந்ததால், அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகியது. உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், நெல்லை மாநகர காவல் ஆணையரான தேஷ்முக் சேகர் சஞ்சய், துணை ஆணையர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, "நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் குவைத் நாட்டில் வேலை செய்து சம்பாதித்து விட்டு, தற்போது மணிப்புரம் பகுதியில் உள்ள காம்பவுண்டில் தனித்தனியே வீடுகட்டி வசித்து வருகிறார்கள். குவைத்தில் இருந்து நாடு திரும்பிய சகோதரர்களின் வீட்டின் அருகே செந்தில்குமார் என்பவரது வீடு உள்ளது. அவர் சென்னையில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வார். நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்துவரும் அவரது மனைவி ரஞ்சிதா, மூன்று மகள்களுடன் வீட்டில் வசித்து வருகிறார். அவர்களது வீட்டின் அருகே அவர்களுக்குச் சொந்தமான குடும்ப கோயில் உள்ளது. அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தின் அடியில் நிக்கோலஸ் ராஜரத்தினம் மற்றும் அவரது சகோதரர் டால்டன் ஆகியோர் தங்களது கார்களை நிறுத்துவது வழக்கம். இதற்கு செந்தில்குமார் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது இந்த நிலையில், செந்தில்குமார் தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் இன்று கோயில் வழியாக தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது கோயிலின் முன்பாக டால்டன் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன் நரேன் என்பவர் காரை நிறுத்தியுள்ளார். அதைத் தட்டிக் கேட்டது தொடர்பாக செந்தில்குமாருக்கும் நரேனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட டால்டன் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது அங்கு வந்த டால்டனின் மூத்த சகோதரர் நிக்கோலஸ் ராஜரத்தினம் என்பவர் சண்டையைத் தடுத்ததோடு நரேனுக்கு ஆதரவாக பேசியதால் செந்தில்குமார் ஆத்திரம் அடைந்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரி குத்தியுள்ளார். அதில் நிலைகுலைந்த நிக்கோலஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த நரேனின் தந்தை டால்டன், செந்தில்குமாரை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் சரமாறியாக கத்திக் குத்து விழுந்துள்ளது. தனது பெரியப்பா நிக்கோலஸ் மற்றும் தந்தை டால்டன் ஆகியோருக்கு அடுத்தடுத்து கத்திக்குத்து விழுந்ததைக் கண்ட நரேன், செந்தில்குமாரின் கத்தியை பிடுங்க முயன்றுள்ளார். அதில் இருவருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் நரேன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்து கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த டால்டன் (75) நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்து விட்டார். அவரது மூத்த சகோதரரான நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நெல்லையில் இரட்டைக் கொலை! கத்திக் குத்தில் காயமடைந்த நரேன் மற்றும் கொலையாளி செந்தில்குமார் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லை மாநகரில் பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/nellai-double-murder-two-brothers-killed-over-car-parking-dispute




