சென்னை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள் ஒலிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் தலைநகராம் மதுரையில், உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற செப்டம்பர் -17ஆம் நாள் நடைபெறவிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியதாகும். தமிழரின் தொன்மை, கலை, பண்பாடு, இறைநெறி, கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகிய அனைத்திற்கும் பெரும் அடையாளமாகத் திகழும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்பது வெறுமனே ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமன்று; அது தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாகும்.அத்தகைய பெருமைக்குரிய திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒதுக்கப்படுவதையோ, தமிழ்த் திருமுறைகளுக்கும் தமிழ் வேத மந்திரங்களுக்கும் உரிய இடம் மறுக்கப்படுவதையோ ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ்வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கின்போது கோபுரக்கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளையும் தமிழ் வேத மந்திரங்களையும் ஓதுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நாடியுள்ளார். அவ்வழக்கில் 24.08.2026 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறைப் பூசை, வேள்விச்சாலை ஆகிய இடங்களில் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதப்படும் அதேவேளையில், தமிழ் திருமுறைகளையும் தமிழ் மந்திரங்களையும் ஓதுவதற்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை வெறும் கடமைக்காக நிறைவேற்றாமல், அதன் உண்மையான நோக்கத்தையும் உணர்வையும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். தமிழர்களின் இறைவனுக்கு தமிழில் வழிபடுவதற்கு நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலையே தமிழினத்திற்கு நேர்ந்துள்ள மிகப்பெரிய அவலம் அல்லவா? தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுறைகள் என நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனைப் பாடிப் பரவியது தமிழில்தானே?அப்படியிருக்க, தமிழர் மண்ணில், தமிழர் கட்டிய திருக்கோயிலில், தமிழர் வணங்குகின்ற இறைவனிடம் தமிழில் பாடுவதற்கும், தமிழில் மந்திரம் ஓதுவதற்கும் இடமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தமிழ் இறைவனுக்கு ஆகாத மொழியா? தமிழில் இறைவன் கேட்டமாட்டாரா? தமிழில் வழிபட்டால் இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும். அத்தகைய தமிழ் மரபின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மனின் திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய முதன்மையும் மரியாதையும் வழங்கப்பட வேண்டியது சலுகை அல்ல; தமிழர்களுக்குரிய மொழி மற்றும் வழிபாட்டு உரிமையாகும். எனவே, ஐகோர்ட் வழங்கியுள்ள உத்தரவின்படி கோபுரக் கலச நன்னீராட்டு, கருவறைப் பூசை, வேள்விச்சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் தமிழ் திருமுறைகளும் தமிழ் வேத மந்திரங்களும் தெளிவாக ஒலிப்பதை தமிழ்நாடு அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும், இவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழில், காலங்காலமாக மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் உரிய மரபு மரியாதை பெற்றவர்களையும், திருக்கோயிலோடு தலைமுறைத் தொடர்புடையவர்களையும் புறக்கணிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. கோயில் என்பது எந்த ஓர் ஆட்சிக்கும், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதன்று. அது மக்களுடையது; இறைநம்பிக்கையாளர்களுடையது; தலைமுறை தலைமுறையாக அதனைப் பேணிக்காத்த மரபுடையவர்களுடையது. ஆட்சி மாறலாம்; அமைச்சர்கள் மாறலாம்; அதிகாரிகள் மாறலாம்; ஆனால் நூற்றாண்டுகளாகத் தொடரும் திருக்கோயில் மரபையும் மாண்பையும் விட்டுவிட முடியாது. எனவே, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டாண்டு காலமாக உரிய மரியாதை பெற்றவர்களையும், அறங்காவல் மற்றும் திருக்கோயில் மரபோடு தொடர்புடையவர்களையும் முறையாக அழைத்து, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கி, எவ்வித அரசியல் வேறுபாடும் பாரபட்சமும் இன்றி குடமுழுக்கு விழாவை அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்த்தாய் வளர்த்த மதுரையில் நடைபெறும் மீனாட்சி அம்மன் குடமுழுக்கில் தமிழே புறக்கணிக்கப்படக்கூடாது! சங்கம் வளர்த்த தமிழின் தலைநகரில்,மீனாட்சி அன்னையின் திருக்கோயிலில், தேவாரம் ஒலிக்கட்டும்! திருவாசகம் முழங்கட்டும்! திருமுறைகள் இசைக்கட்டும்! மதுரை மீனாட்சி அன்னையின் திருக்குடமுழுக்கில் தமிழ்மறை முழங்கி, தமிழின் பெருமை விண்ணதிரட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-thirumurais-must-be-recited-during-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-temple-seeman




