Full artikkel
திரைப்படங்களில் நாம் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டாடும் ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளுக்கும் பின்னால் எண்ணற்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். காட்சிகளைத் திட்டமிடுவது, அவற்றைச் செயல்படுத்துவது என ஸ்டண்ட் காட்சிகளின் 'ஏ டு இசட்' வேலைகள் அனைத்தும் ஸ்டண்ட் கலைஞர்கள், டூப் கலைஞர்களால்தான் சாத்தியமாகிறது. சில நேரங்களில், ஆபத்தைக் கருதாமல் நடிகர்களுக்குப் பதிலாகக் கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபடுபவர்கள்தான் டூப் ஆர்ட்டிஸ்ட்கள். அப்படியொரு டூப் ஆர்ட்டிஸ்ட்தான் கோட்டீஸ்வரன். Dupe Artist - Koteeswaran ஃபைட்டராகவும், டூப் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பல திரைப்படங்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். விக்ரமுக்கு 'தங்கலான்', 'வீரதீர சூரன்' போன்ற படங்களிலும், சூர்யாவுக்கு 'கருப்பு' படத்திலும் டூப் போட்டிருக்கிறார் கோட்டீஸ்வரன். ஒரு டூப் கலைஞரின் வாழ்க்கை எத்தகையது என்பதிலிருந்து அவருடன் உரையாடத் தொடங்கினோம். அது ஸ்டண்ட் கலைஞர்களுக்குப் பின்னிருக்கும் வலி, அவர்களுக்கான வாய்ப்பு, அவர்கள் முன் நிறைந்திருக்கும் ரிஸ்க் எனப் பல பக்கங்களுக்கு நீண்டது. நம்மிடையே பேசியவர், "சினிமாவுல ரொம்ப வருஷமா டூப் ஆர்ட்டிஸ்டா இயங்கி வர்றேன். ஆனா, நான் டூப் ஆகணும்னு சினிமாவுக்கு வரல. என்னோட ஆரம்பகால லட்சியமே ஒரு போலீஸ் அதிகாரி ஆகணும் என்பதுதான். அதுக்காகத் தீவிரமா முயற்சி பண்ணி தேர்வெல்லாம் எழுதினேன். ஆனா, வெறும் ஒரு மார்க், ரெண்டு மார்க் வித்தியாசத்துல அரசு வேலை வாய்ப்பு கைநழுவிப் போயிடுச்சு. நான் ஏற்கனவே ஒரு ஜிம்னாஸ்டிக் பிளேயர். அதனால என்னை ஸ்டண்ட் யூனியன்ல ஃபைட்டராகச் சேர்த்துக்கிட்டாங்க. அப்படி 2011-ல இருந்து 2013 வரைக்கும் தொடர்ந்து மூணு வருஷம் ஃபைட்டரா வேலை பார்த்தேன். அதன் பிறகு ஒரு பள்ளிக்கூடத்துல பி.டி வாத்தியாராகச் சேர்ந்துட்டேன். அப்போ நான் விக்ரம் சாரோட 'வீர தீர சூரன்' லுக்ல இருந்தேன். Dupe Artist - Koteeswaran கொரோனா டைம்ல ஸ்கூல்ல சம்பளம் தர முடியாத சூழல் உருவாகிடுச்சு. அதனால மறுபடியும் ஃபைட்டராகத் திரும்ப வந்துட்டேன். மறுபடியும் நான் ஃபைட்டராக வந்தபோது, நிறைய படங்களுக்கு டூப்னு சொல்லக்கூடிய பாடி டபுள் ஆர்ட்டிஸ்ட் தேவைப்பட்டாங்க. அப்படி விக்ரம் சாருக்கு 'தங்கலான்', 'வீரதீர சூரன்' போன்ற படங்கள்ல அவருக்கு டூப் போட்டேன். தொடர்ந்து அவரோட படங்கள்ல டூப் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து 'கருப்பு' படத்துல சூர்யா சாருக்கு முதல் முறையா படம் ஃபுல்லா டூப் பண்ணினேன். இதுதாங்க என்னுடைய பயணம்" எனத் தொடர்ந்து அவருடைய கதையை விவரிக்கத் தொடங்கினார் கோட்டீஸ்வரன். ''நடிகர்களுக்கு டூப் போடும்போது, எப்போதும் அவங்களுடைய டீம் ஆட்கள், தோற்றம் தொடங்கி அந்த நடிகரைப் பற்றிய சில விவரங்கள் சொல்வாங்க. பிறகு அவங்களுடைய ஹேர்ஸ்டைல், நடை, உடல்மொழினு எல்லாமே மாத்திக்கணும். அந்த நேரத்துல டயட்டும் ரொம்ப முக்கியம். அப்போதான் நம்மளால நடிகரைப் போன்ற உடலமைப்பைக் கொண்டு வர முடியும். 'கருப்பு' படத்துக்காக என்னுடைய போட்டோஸ் கேட்டிருந்தாங்க. நான் ஒரு அஞ்சு போட்டோ அனுப்பிச்சேன். அவங்களுக்கும் பிடிச்சிருந்தது. அப்போ நான் விக்ரம் சாரோட 'வீர தீர சூரன்' லுக்ல இருந்தேன். கோயம்புத்தூர்ல ஷூட்டிங் கூப்பிட்டாங்க. Dupe Artist - Koteeswaran அங்கே போய் தாடி, முடி எல்லாம் சூர்யா சார் லுக்ஸ்க்கு ஏத்த மாதிரி வெட்டி செக் பண்ணிப் பார்த்துட்டு ஓகே பண்ணிட்டாங்க. பெங்களூரைச் சேர்ந்த ஃபைட் மாஸ்டர் விக்ரம் மோர், அவரோட அசிஸ்டன்ட் ராபர்ட் ஆகியோர் என்னைப் பார்த்துட்டு, 'இவரு டூப்புக்கு கரெக்ட்டா இருப்பாரு'ன்னு சொன்னாங்க. மாஸ்டருக்கும் போகப் போக என்னோட ஒர்க் பிடிச்சுப் போய் படம் முழுக்க நிறைய ஃபைட் சீனுக்கும் என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க. என்னோட உடல்மொழியும் சூர்யா சாரின் உடல்மொழிக்கேற்ப கச்சிதமா பொருந்திப் போச்சு. 'கருப்பு' படத்துல குதிரை ஓட்டிட்டு வர்ற ஓப்பனிங் ஃபைட், இடைவேளைக் காட்சியில வர்ற ஃபைட் சீன், மெட்ரோ ஃபைட், ஹைவே கார் ஃபைட், கிளைமாக்ஸ்ல ஃபைட்னு நிறைய இடங்கள்ல நான் டூப் பண்ணியிருக்கேன். ஆனால், ஓர் எதார்த்தமான உண்மை என்னன்னா, இந்தத் துறையில டூப் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்குப் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காது. குறிப்பிட்ட சில மாஸ்டர்ஸும், ஆக்டர்ஸும் நம்மள விரும்பி அவங்களோட அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்புத் தருவாங்க. அது நமக்கு பொருளாதார ரீதியாக பெரிய சப்போர்ட்டா இருக்குமே தவிர, அது பொதுவெளியில எனக்கான அங்கீகாரத்தைத் தேடித் தராது. பொதுவா ஒரு டூப் ஆர்ட்டிஸ்ட்டோட வேலை என்னன்னா, காலையில இருந்து மாலை வரைக்கும் அந்த ஹீரோவுக்கான சண்டைக் காட்சிகளுக்கு உதவியாக இருக்கணும். நடிகர்கள் சிலர் அவங்களாகவே கஷ்டமான ஸ்டண்ட் காட்சிகளை பெஸ்ட்டா பண்ணிடுவாங்க. Dupe Artist - Koteeswaran சில இடங்கள்ல அவங்களால் செய்ய முடியாத ஸ்டண்ட்க்கு மட்டும்தான் டூப்பைப் பயன்படுத்துவாங்க. அதுபோக, நடிகர்களுடைய டேட்ஸ் இல்லாத சமயத்திலும் டூப் ஆர்ட்டிஸ்ட்டை யூஸ் பண்ணுவாங்க. டூப் ஆர்ட்டிஸ்ட்னு மட்டும் இல்ல, எப்போதுமே ஃபைட்டர்ஸோட வேலை ரிஸ்க்கானது. படத்துல பாக்குறவங்களுக்கு 'வாவ், இது சின்ன விஷயம் தானே'ன்னு தோணும். ஆனா, அதுக்குப் பின்னாடி நிறைய ஆபத்தான விஷயங்கள்தான் ஒளிந்திருக்கு. வெயில்ல ஸ்டண்ட் செய்யுறதுல இருந்து தொடங்கி ஸ்டண்ட் துறைக்கு எப்போதும் நிறைய உழைப்பைக் கொடுக்கணும். ஆனா, அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் புரிஞ்சுக்கணும். கஷ்டம் இல்லாமல், இந்த உலகத்துல எதுவுமே நிலைக்காது. அங்கீகாரம் கிடைக்காத சமயத்திலும், உறக்கமில்லாம எங்களை ஓடிக்கிட்டே இருக்க வைக்கிற, சாதிக்கணும்கிற வெறிதான் என்னை மாதிரியான கலைஞர்களை ஓட வைக்குது." என்றார். "'கருப்பு' படத்தை 'Good Bad Ugly' படத்தோட ஒப்பிடுறாங்க, ஆனா நாங்க.!"- ஆர்.ஜே பாலாஜி மேலும் தொடர்ந்தவர், "நடிகர்களுக்கு எப்போதுமே டூப் ஆர்ட்டிஸ்ட்களை ரொம்ப பிடிக்கும் சார். ரஜினி சார், கமல் சார் தொடங்கி அத்தனை நடிகர்களும் ஸ்டண்ட் கலைஞர்களுக்குத் தனி மரியாதை கொடுப்பாங்க. ஏன்னா, அவங்களுக்கு இந்தத் துறையில இருக்கிற கடினம் பற்றித் தெரியும். நடிகர்கள் டூப் கலைஞர்களுக்கு அன்பளிப்பும் கொடுப்பாங்க. எனக்கு விக்ரம் சார், சூர்யா சாரெல்லாம் அன்பளிப்பு கொடுத்திருக்காங்க. Dupe Artist - Koteeswaran ஆனா நான் அதை எதிர்பார்த்து வேலை செய்ய மாட்டேன். இதையெல்லாம் தாண்டி, நான் யார் என்பது அவங்களுக்குத் தெரியணும்னு நினைப்பேன். நான் பெஸ்ட்டா வேலை பார்ப்பேன்னு பெயர் வாங்குவதுதான் என்னுடைய டார்கெட்டாக இருக்கும். 'கருப்பு' படத்துல சூர்யா சார் சில விஷயங்கள்ல எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணினாரு. எப்போதுமே பெரிய சீனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு டூப் போடும்போது, நம்மைக் கூப்பிட்டு வச்சுப் பேசுவாங்க, அவங்களோட பாடி லாங்குவேஜை நமக்குச் சொல்லிக் கொடுப்பாங்க. விக்ரம் சார், "டேய், என்னோட பாடி லாங்குவேஜ் கொஞ்சம் இப்படி இருக்கும்டா பார்த்துக்கோ"னு சொல்வார். நானும் அவங்க சொல்றதுக்கு ஏற்ப தயாராகிடுவேன். இப்படியான டூப் வாய்ப்புகளால சில கேரக்டர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சமீபத்துல 'கர' படத்துலகூட ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருப்பேன். இப்படி நிறைய படங்கள்ல சில சீன்களிலும் நடிச்சிருக்கேன். தமிழ் சினிமாவுல மட்டுமில்லாமல், தெலுங்குல விஜய் தேவரகொண்டா நடிச்ச 'டியர் காம்ரேட்' படத்துல விஜய் தேவரகொண்டாக்கு நான்தான் டூப் போட்டேன். Dupe Artist - Koteeswaran அப்புறம் ராம்சரண், தமன்னா நடிச்ச 'ரகளை' படத்தோட கிளைமாக்ஸ் ஃபைட்ல நான்தான் டூப் போட்டேன்" என்றவர், "நான் ஸ்கூல்ல பி.டி டீச்சரா இருந்தப்போ மாசம் ஒரு வருமானம் வந்தது. சினிமாவுல மாசத்துல அஞ்சு நாள் ஷூட் இருக்கும். சில சமயம் ரெண்டு மாசத்துக்குச் ஷூட்டிங்கே இருக்காது. இதுமட்டுமில்ல, படங்களுக்கான பேமெண்ட் வர்றதுக்கு சில மாதங்கள், சில வருஷங்கள்கூட ஆகும். இதாங்க எங்களுடைய லைஃப்!" என்றார். `உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under



