புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) கட்சியின் நிறுவனருமான என். ரங்கசாமி, தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி தமிழ்நாட்டில் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கட்சியை விரிவுபடுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை ரங்கசாமி வெளிப்படையாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்தத் திட்டம் செயல்பாட்டு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக, பாமக நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் பேரன் முகுந்தன் பரசுராமனுக்கு தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் வன்னியர் சமூக வாக்கு வங்கியிலும், வட தமிழக அரசியலிலும் ஒரு புதிய சமன்பாட்டை உருவாக்க ரங்கசாமி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ரங்கசாமி புதுச்சேரியைத் தாண்டி தமிழ்நாட்டில் விரிவாக்கம் 2001-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ரங்கசாமி, கடந்த பல ஆண்டுகளாக புதுச்சேரி அரசியலிலேயே தனது கட்சியை மையப்படுத்தி வந்தார். தற்போது ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வரும் அவர், இனி தமிழ்நாட்டிலும் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னோட்டமாக பல தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பதாகவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இலக்கை கட்சி ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆன்மிக நம்பிக்கையும் அரசியல் முடிவும் ரங்கசாமி, சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியசுவாமிகளின் தீவிர பக்தராக அறியப்படுகிறார். முதலமைச்சராக பதவியேற்கும் முன்பும் முக்கிய அரசியல் முடிவுகளுக்கு முன்னரும் அந்தக் கோயிலுக்கு சென்று வழிபடுவது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் கட்சியை தொடங்குவதற்கும் ஆன்மிக ரீதியாக அனுமதி பெற்ற பிறகே இந்த முடிவை இறுதிப்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஜக அழுத்தத்திலிருந்து வெளியேறும் அரசியல் முயற்சியா? புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றிருந்தாலும், கட்சி முழுமையாக புதுச்சேரிக்குள் மட்டுமே இயங்குவதால் பாஜகவின் அரசியல் அழுத்தம் அதிகரித்து வருவதாக ரங்கசாமி நீண்ட காலமாக கருதியதாக கூறப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டிலும் தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்குவது எதிர்காலத்தில் அவருக்கு கூடுதல் அரசியல் சுதந்திரத்தை வழங்கும் என்ற கணிப்பும் அவரது தரப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தவெக ஆட்சியுடன் எதிர்கால கூட்டணி? தமிழகத்தில் தற்போது தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகளையும் ரங்கசாமி பரிசீலித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில் தவெக குறித்து ரங்கசாமி தெரிவித்த நேர்மறை கருத்துகளும் இந்த அரசியல் கணிப்புகளுக்கு வலுசேர்த்துள்ளன. பாமக குடும்ப அரசியலில் புதிய திருப்பம் அண்மையில் டாக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மீண்டும் இணைந்ததைத் தொடர்ந்து, குடும்ப அரசியலில் புதிய சமநிலை உருவானது. அதன் பிறகு ராமதாஸின் மகளும், அன்புமணியின் சகோதரியுமான காந்திமதியின் அரசியல் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக பாமக வட்டாரங்களிலேயே பேசப்பட்டது. "அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை; வன்னிய மக்களை வைத்து."- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் குடும்ப இணைப்பு நிகழ்ச்சியில்கூட காந்திமதி பங்கேற்காதது அரசியல் கவனத்தை ஈர்த்தது. மேலும், இனிமேல் கட்சியை அன்புமணியே முழுமையாக வழிநடத்துவார் என்றும், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் டாக்டர் ராமதாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காந்திமதியும் அவர் மகன் முகுந்தன் பரசுராமனும் புதிய அரசியல் தளத்தைத் தேடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. முகுந்தன் - ரங்கசாமி ரங்கசாமியை சந்தித்த காந்திமதி – முகுந்தன் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, காந்திமதியும் அவரது மகன் முகுந்தனும் சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் என்.ஆர். காங்கிரஸுக்காக பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அன்புமணி - முகுந்தன் ஏற்கெனவே பாமகவிலிருந்து விலகிய அருள் என்பவருக்கும் தமிழ்நாடு அமைப்பில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது காந்திமதி – முகுந்தன் இணைப்பு அந்தக் கட்சிக்கு கூடுதல் அரசியல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. முகுந்தனுக்கு மாநிலத் தலைவர் பொறுப்பா? தமிழகத்தில் வன்னியர் சமூகத்தை மையமாகக் கொண்டு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், ராமதாஸ் குடும்பத்தைச் சேர்ந்த முகுந்தன் பரசுராமனுக்கே மாநிலத் தலைவர் பொறுப்பை வழங்க ரங்கசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட தமிழகத்தில் பாமகவின் பாரம்பர்ய ஆதரவு வாக்குகளை ஈர்க்கவும், புதிய தலைமுறை முகத்தை முன்னிறுத்தவும் இந்த முடிவு உதவும் என என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் கருதுவதாக கூறப்படுகிறது. சி.வி. சண்முகத்துடனும் பேச்சுவார்த்தை? இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும் கட்சித் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தன. அவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர் என்பதால், கடந்த ஒரு மாதமாக ரங்கசாமி அவருடனும் தொடர்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியானாலும், அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதன் பிறகே ராமதாஸ் குடும்பத்தைச் சேர்ந்த முகுந்தனை முன்னிறுத்தும் திட்டம் இறுதி செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.வி.சண்முகம் தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகுமா? புதுச்சேரியைத் தாண்டி தமிழ்நாட்டில் என்.ஆர். காங்கிரஸை விரிவுபடுத்தும் ரங்கசாமியின் முயற்சி, வெறும் கட்சி தொடக்க நிகழ்வாக மட்டுமல்லாமல், வட தமிழக வன்னியர் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. பாமக குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், காந்திமதி – முகுந்தன் இணைப்பு, எதிர்கால கூட்டணி அரசியலுக்கான சாத்தியக்கூறுகள், வன்னியர் சமூகத்தில் புதிய ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சி ஆகியவை அனைத்தும் இணைந்து, ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள என்.ஆர். காங்கிரஸின் தமிழக தொடக்க விழாவை அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வாக மாற்றியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/nr-congress-to-enter-and-focus-on-tamilnadu-politics




