நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் விதிகளை மீறி ரசாயனத்தில் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த 56 விநாயகர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நீர்நிலைகள் பாதிப்பு நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி விழா, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விழாக்களில் சாமி சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் இத்தகைய விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் களிமண்ணால் ஆன சிலைகள் கடந்த காலத்தில் விற்பனைக்கு வந்தன. விநாயகர் சதுர்த்தி பூஜையின்போது பூஜைக்கு வைக்கப்படும் சிலைகள் பின்பு நீர் நிலைகளில் கரைக்கப்படும். காலப்போக்கில் களிமண் சிலைகளின் எண்ணிக்கை குறைந்து பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வருகிறது. அதனை நீர் நிலைகளில் கரைக்கும் போது நீர் மாசுபடுவதுடன், நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. விழா நாட்கள் பூஜையின்போது களிமண்ணால் ஆன சிலைகளை வைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது. அதேசமயம் விதிகளை மீறி பிளாஸ்டர் ஆப் பாரிசால் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் வருகிற 14-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கிருஷ்ணர், விநாயகர், சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் வந்துள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பகுதியில் சாலையோரம் வைத்து வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சாமி சிலைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே பெரும்பாலான சிலைகள் மீது புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், சிலைகள் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்டுள்ளதும், பல வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளதாலும், சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. 56 விநாயகர் சிலைகள் பறிமுதல் அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின்பேரில் மாநகர் நல அதிகாரி டாக்டர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர் ஜான், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வடசேரி பகுதிக்கு வந்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 56 விநாயகர் சிலைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மற்ற சிலைகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவதாக வடமாநில தொழிலாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்துச் சென்றனர். நாகர்கோவில் மாநகர் மட்டுமின்றி இதேபோன்று மாவட்டத்தின் பல இடங்களிலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வு நடத்தி, சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயன சிலைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nagercoil-56-chemically-prepared-ganesha-idols-seized



