சென்னை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்டு கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், மூன்று மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் மளிகை கடை பக்கம் போவதையே குறைத்துக்கொண்டார்கள். இடதுசாரிகள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007-ம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, சிறப்பு விநியோகத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்டவற்றை சந்தை விலையைவிட குறைந்த விலையில் வழங்கினார்கள். மேலும், கடுகு, சீரகம் போன்ற 10 மளிகைப் பொருட்களை ரூ.50-க்கு வழங்கினார்கள். இந்தத் திட்டம் இன்றும். நடைமுறையில் உள்ளது. ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, கூடுதலான அளவில் வழங்க வேண்டும். மேலும் விலைவாசி உயர்வு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார். பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரிசி விலை ரூ.20 வரை உயர்ந்துள்ளது. அரிசி, சர்க்கரை, மிளகாய், புளி, வெல்லம், எண்ணெய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் விலையைக் குறைக்க, எந்த மாநிலத்தில் விலை குறைவாக உள்ளதோ, அந்த மாநிலத்திற்குச் சென்று கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகம் கொண்டு வந்து விற்பனை செய்து, விலை ஏற்றத்தைத் தடுத்தோம். அதேபோல், இந்த அரசும் செய்ய வேண்டும் என்றார். பாமக எம்.எல்.ஏ. கனேஷ்குமார் பேசுகையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் விலை 30% வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து பேசியதாவது:- ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால்தான் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளன; வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினந்தோறும் கவனித்து வருகிறோம். விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு விற்பனை செய்யவும், கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயம், உருளை விலையும் தினசரி கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/rise-in-prices-of-essential-commodities-calling-attention-motion-in-the-assembly




