சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 'அனுபவமற்றவர்கள் ஒன்று கூடி மடம் கட்டுவது' போல், ஒரு ஆட்சியை த.வெ.க-வினர் அமைத்துள்ளனர். ஆனால், மடத்தை எப்படி பராமரிப்பது என்று திணறுகிறார்கள். தேர்தல் நேரத்தில் வாயில் வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக இந்த மகானுபவர்கள் அளித்துவிட்டு, அவைகளை நிறைவேற்றுவது எப்படி என்று தெரியாமல் திணறுகிறார்கள். கடிவாளம் இல்லாத குதிரை போல் இந்த ஆட்சி தறிகெட்டு ஓடுகிறது. த.வெ.க. எப்படி தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதி பரிபாலனமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசியல் ரீதியான அரசு வழக்கறிஞர்கள் அனைவரும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே விலகிவிட்டார்கள் என்று தெரிகிறது. அந்த இடங்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க பல லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் சொல்லவில்லை. த.வெ.க. கட்சியைச் சார்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அரசு வக்கீல்கள் நியமனம் தாமதம் தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால் விசாரணைகள் பாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு மாவட்ட நீதிபதி, விசாரணைக்கு வந்த சாட்சியிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை செய்யாததால், மீண்டும் அவரை நீதிமன்றத்திற்கு வரவழைப்பதற்காக, அவருக்கு பயணப்படி வழங்க அரசுக்கு உத்தரவிடப்படும் என்று எச்சரித்துள்ளார். அரசின் சார்பாக, அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும், உதவி அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக செயல்படும், அரசு நீதித் துறையினர் கீழமை நீதிமன்ற பணிகளுக்குச் செல்லாமல் இருப்பதன் காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது. அரசு நிர்வாகத்திற்கு பொய்க்கால் குதிரை ஆட்சியாளர்கள் புதியவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, அனுபவமிக்க சட்டத் துறையினரை அணுகி, தமிழகம் முழுவதும் முறையாக திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, நீதி பரிபாலனத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்த த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன். கிரிமினல் பிரச்சினை சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சிவில் பிரச்சனையால் பாதிப்பு என்றாலும், ஒரு கிரிமினல் பிரச்சினையால் பாதிப்பு என்றாலும் அவர்களின் கடைசி புகலிடமும், நம்பிக்கையும் நீதிமன்றங்கள்தான். முறையாக அரசு வழக்கறிஞர்கள் இல்லாத காரணத்தால், வழக்குகள் தள்ளிப்போகும்போது, வழக்காடிகள் அவர்களுடைய வழக்கறிஞர்களுக்கு 'பீஸ்-கட்டணம்' கொடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலையும் உருவாகும். சிறு குழந்தைகள் கடல் மணலில் கோபுரம் கட்டி விளையாடுவதுபோல் இந்த ஆட்சியாளர்கள், அரசை கையில் வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல. நீதித்துறை மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற சூழ்நிலைகள் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்கள் எல்லாம் முதல்-அமைச்சரின் காதுகளில் விழுகிறதா என்றே தெரியவில்லை. ஆகாயத்தில் கோட்டை கட்டாமல், அரசாட்சி கையில் என்ற நிலையை உணர்ந்து, வாக்களித்த மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்று த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/should-people-who-stole-goats-and-went-to-jail-be-given-the-position-of-public-prosecutor-edappadi-palaniswami-condemns-the-tvk-government




