சென்னை, “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் வந்துவிட்டார். அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- முதலீடுகளை ஈர்ப்பதற்கு தானா? தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தின்போது ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. முதல்-அமைச்சர் பயணிகள் விமானத்தில் மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார், முதலீடுகளை குவித்துக்கொண்டு வரப்போகிறார் என தவெகவினர் பரப்பிய ரீல்ஸ்களுக்கும், முதல்-அமைச்சர் முன்னிலையில் முன்மொழியப்பட்ட முதலீடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக அமைந்திருக்கிறது. முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறைப் பயணத்தில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் அதன் பொருளாதாரப் பயன்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டிய அரசு நிர்வாகமோ அதற்கு மாறாக மோட்டார் வாகனப் பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்; ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் என செய்திகளை வெளியிட்டதன் மூலம், முதல்-அமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மீதமுள்ள 5 நாட்களில் யார் யாரைச் சந்தித்தார்? கடந்த 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய்யின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில், 14-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே முதலீட்டாளர்களைச் சந்தித்ததாகவும், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது. ஆறு நாட்கள் அரசுமுறைப் பயணத்தில் முதலீட்டாளர்களைச் சந்தித்த ஒருநாள் போக, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதல்-அமைச்சர் யார் யாரைச் சந்தித்தார்? தொழில் முதலீட்டை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் உள்ளது. லண்டன் செல்ல அவசியம் என்ன? அதோடு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Limited) எனும் பன்னாட்டு நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தையே தனது வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாகக் காட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விரும்புவதாகவும், அந்நிறுவனத்தின் பெயரைக்கூட குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு, அத்தகைய முதலீடு உண்மையில் தமிழகத்திற்கு வருமா அல்லது வராதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது. கிடைத்த பயன்கள்தான் என்ன? பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பல்வேறு முக்கியமான திட்டங்களும் அரசு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படும் அளவிற்கு, முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன்கள்தான் என்ன? என்ற கேள்வியும் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள், அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு, மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என ஒட்டுமொத்த மாநிலமும், மக்களும் அசாதாரண சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை மறந்து, எதைப் பற்றியும் கவலையில்லாமல், முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் லண்டனுக்கு சென்று ரீல்ஸ் கன்டென்ட்களைத் தேற்றி வந்திருகிறார் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். முதலீடுகள் எப்போது வரும்? தவெக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் ஒவ்வொரு முறையும் பழைய சம்பவங்களை திருத்தி பொய் பொய்யாக பேசி, தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தி, சோதனை, ரெய்டு, கைது எனும் பெயரில் அதிகார அமைப்புகளை ஏவியும் மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசு, முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் ஏமாற்றத்தில் முடிந்ததைத் திசைதிருப்ப முயன்றால், அதற்கான எதிர்வினை மிகக் கடுமையாக இருக்கும். எனவே, ஆட்சிக்கு வந்த நாள் முதல் எதற்கெடுத்தாலும் “வெள்ளை அறிக்கை வெளியிடுவோம், வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்” எனக் கூறிவரும் தவெக அரசு, முதல்-அமைச்சரின் இந்த அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் நாள் வாரியாக எந்தெந்த முதலீட்டாளர்களை முதல்-அமைச்சர் சந்தித்தார்? அதன் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும்? இவை அனைத்தும் எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்? என்பது தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தும் இந்த நேரத்தில், முதல்-அமைச்சரிடம் நாங்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதல்-அமைச்சர் வந்துவிட்டார்… அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-has-arrived-when-will-the-investments-come-ttv-dhinakaran




