சென்னை, புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னைக்கு அருகில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ம் ஆண்டில் அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும். சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன. பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்துவிட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில்தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும்தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள் தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும்தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும். 2031-ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத் தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும். சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம் நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாததுதான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/identify-and-announce-site-for-new-airport-urgently-anbumani-ramadoss



