சென்னை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஆண்டாண்டு காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழ் குடிமக்களின் அரணாக விளங்கிய அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க், தமது இறுதி மூச்சுவரை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் காட்டிய அறிவு வழியில் பயணித்த பெருமைக்குரியவர். மக்களாட்சி முறைமையில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அறிவாயுதம் ஏந்துவதே உறுதியான இறுதி தீர்வாகும் என்பதை உளமார நம்பியதோடு, அதனையே தம்மைப் பின்பற்றியவர்களுக்கும் கற்பித்தவர். அதனை அடியொற்றியே, தங்கள் மீது பூட்டப்பட்ட சமூக விலங்கை உடைத்தெறிந்து, தான் பிறந்த சமூகம் மேன்மையுற வேண்டும், அதிகாரத்தாலும், ஆட்சியாளர்களாலும் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆதித்தமிழ்க்குடி பிள்ளைகள் ஏராளமானவர்கள் சட்டம் பயில பேருதவி புரிந்த பெருந்தகையாவார். சமூகப் பணிகள் ‘தமிழர்கள் நாம் ஒன்றாகாதவரை நமக்கென்று தனித்த அரசியல் வலிமையையோ, அதிகார வலிமையையோ ஒருபோதும் பெறமுடியாது’ என்ற நாம் தமிழர் கட்சியின் தமிழர் ஓர்மை கோட்பாட்டையே, தாம் பயணித்த அரசியல் தளத்தில் நின்று முழங்கியவர். அரசியல் களத்தில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நாடறிந்த அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அதிகாரமிக்கப் பதவியும் வகிக்காத போதிலும், புரட்சிகர சிந்தனையுடன் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் ஆற்றிய சமூகப் பணிகள்தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்றிட முதன்மையான காரணமாகும். அரசியல் போராளி அநீதி இழைக்கும் அதி ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய இடையூறாகவும் தடைக்கல்லாகவும் இருந்த காரணத்தினால்தான் அரசியல் போராளி ஆம்ஸ்ட்ராங்கின் உயிரைப் பறிக்கும் சதிச்செயல் நடந்தேறியது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுபோல அக்கொடுஞ்செயல் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்றளவும் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. அக்கொடூர நிகழ்வில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். புகழ் வணக்கம் வாழ்நாள் முழுவதும் குரலற்ற எளிய மக்களின் குரலாக, பாதுகாப்பு அரணாக திகழ்ந்த அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்க் இன்று நம்மோடு இல்லாதபோதிலும், அவர் கையளித்து சென்றுள்ள மக்கட் பணிகளை தடைபடாமல் தொடர்வதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும். மறைந்த பகுஜன் ஜமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அன்புச்சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்னுடைய புகழ் வணக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/armstrong-memorial-day-seaman-praises




