பெங்களூரு, கர்நாடகம், தமிழ்நாடு இடையே காவிரி நீரைப் பங்கிட்டு கொள்வதில் நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 13-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என கன்னட அமைப்பினர் அறிவித்தனர். இதற்கிடையே, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடுவது மிகவும் கடினம் என கர்நாடக மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;- “காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரும் நானும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். முன்னதாக, வினாடிக்கு 3,500 கன அடி நீரைத் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது; அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது, 15 நாட்களுக்குத் தினமும் 12,000 கன அடி நீரைத் திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது மொத்தம் 16 டி.எம்.சி. அளவுக்கு சமமானது. இவ்வளவு பெரிய அளவிலான நீரை விடுவிப்பது எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகவும் கடினம். மாநிலத்தின் நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு குறைவான அளவிலான நீரைத் திறக்குமாறு கேட்டிருந்தால், கர்நாடகாவுக்கு எந்த சிரமமும் இருந்திருக்காது. ஆனால், இப்போது உத்தரவிடப்பட்டுள்ள அளவு மிக அதிகம். இங்கு நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. 800 முதல் 1,000 அடி ஆழம் வரை தோண்டினாலும் கூட எங்களுக்கு நீர் கிடைப்பதில்லை. காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் எங்கள் தரப்பு வாதத்தை வலுவாக எடுத்துரைத்த போதிலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களில் 16 டி.எம்.சி. நீரைத் திறப்பது எங்களுக்குக் கடினமான காரியம். இது குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம்; அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்போம். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலைதான் உள்ளது. கர்நாடக முதல்-மந்திரி டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களிடம் பேசியுள்ளார். மாநிலத்திற்கு எந்த அநீதியும் இழைக்கப்படாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/it-is-difficult-to-release-12000-cubic-feet-of-water-to-tamil-nadu-daily-karnataka-minister




