சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுகவைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாய தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த லட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை! திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வு செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு! ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-keerthana-can-he-violate-the-law-in-the-name-of-asking-questions-to-children-in-schools-seeman-condemns




