பிலிகுண்டுலு கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பற்றாக்குறையாக பெய்துள்ளது. இதனால் காவிரி படுகையில் ஹாரங்கியை தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பாமல் இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 79 அடிக்கும் கீழ் தண்ணீர் குறைந்து போன நிலையில், நடப்பு ஆண்டு ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தமிழகம் கேட்டது. ஆனால், வழக்கம் போல் கர்நாடகம் மறுத்து விட்டது. நீர் வரத்து அதிகரிப்பு இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி மொத்தம் 4% டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் பெங்களூரு, மண்டியா, மைசூருவில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த சூழலில், தற்போது குடகு, சிக்கமகளூரு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி படுகையில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கபினி அணையும் நிரம்பி வருகிறது. கபினி அணை நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணையில் 23.078 டி.எம்.சி., கபினியில் 18.610 டி.எம்.சி., ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி. மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி. என மொத்தம் 77.537 டி.எம்.சி. மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி.) உள்ளது. எனவே, விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரை தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த சிரமமும் இருக்காது. இதற்கிடையே, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்புப்பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கடந்த 31-ந்தேதி வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. அதன் பாதுகாப்பை முன்னிட்டு அணையில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்து விடப்படுகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி இதனால், கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு, தமிழக எல்லையை வந்தடைந்த உபரிநீரின் அளவு ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cauvery-water-reaches-border-farmers-rejoice-as-surplus-water-flows-to-tamil-nadu-karnataka-border




