சென்னை, மத்திய அரசு கொண்டுவரவுள்ள வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா – 2026 (FCRA Amendment Bill, 2026)-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை மனதார வரவேற்பதாக ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “கல்வி, சுகாதாரம், சமூகநலம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வரும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களானது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் FCRA திருத்த மசோதா கொண்டுவரப்படுவது கவலைக்குரியது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்போது, அவற்றின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநலச் சேவைகளைப் பெற்று வரும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக ரீதியாகப் பின்தங்கிய மக்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே எனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளேன். 04.08.2026 அன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், இந்த FCRA திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்க வேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தினேன். அதேபோல், 08.08.2026 அன்று கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அன்புச் சகோதரர் ஜோசப் விஜய்யின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டத்திலும் இது குறித்து எடுத்துரைத்தேன். சிறுபான்மை மக்கள் முதல்-அமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள வெளிநாட்டு நிதியைப் பெறும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தேன். தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசும், தோழமைக் கட்சிகளும் ஒன்றுபட்டு வலுவாக எதிர்ப்போம் என்ற ஒருமித்த கருத்துடன் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறுபான்மை மக்களின் நலன்களுக்கும் எதிரான எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இதுகுறித்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அன்றைய கூட்டத்திலேயே முதல்-அமைச்சர் உறுதியளித்தார். அந்த உறுதியை செயல்படுத்தும் வகையில், FCRA திருத்த மசோதாவைத் திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், கொண்டுவரப்படவுள்ள FCRA திருத்த மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (JPC) பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முன்வந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஒருமித்த தீர்மானம், JPC பரிசீலனையின்போதும் முக்கியத்துவம் பெறும். இதேபோல மற்ற மாநிலங்களிலும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது இந்த மசோதா நிறைவேற்றம் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை உள்ளது. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பணிகளையும் பாதுகாப்பதற்கான எங்களது குரல் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலுவாக ஒலிக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/resolution-unanimously-passed-in-the-tamil-nadu-legislative-assembly-durai-vaiko-welcomes-it




