சென்னை, வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வேலை தேடும் இளைஞர்களுக்கு வரிச்சுமையா? ஒரு இளைஞன் வேலை தேடுவது ஆடம்பரத்திற்காக அல்ல. தன் குடும்பத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவும், கல்விக் கடனை அடைப்பதற்காகவும், தனது வாழ்க்கையைத் தானே கட்டியெழுப்புவதற்காகவும்தான் வேலை தேடுகிறான். அத்தகைய வேலைவாய்ப்பைத் தேடும் முயற்சியில், வேலை தேடுபவர்களையும் வேலை வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் ஆட்சேர்ப்பு, பணியாளர் தேடல், வேலைவாய்ப்பு பரிந்துரை, தொழிலாளர் வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. விதிகளில் பணியாளர்களைத் தேடுதல், வேலைவாய்ப்புக்குப் பரிந்துரை செய்தல், தொழிலாளர்களை வழங்குதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகள் தனிப்பட்ட பிரிவுகளாக இடம்பெற்றுள்ளன. நிரந்தரப் பணியமர்த்தல், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர் வழங்கல், தற்காலிகப் பணியாளர் வழங்கல் போன்ற சேவைகளும் இதில் அடங்குகின்றன. 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பு மேலும், ஜி.எஸ்.டி. வரி விகித அட்டவணையில் 9985-ஆம் வகைப்பாட்டின் கீழ் வரும் பொதுவான ஆதரவுச் சேவைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் நிலையில், அந்தச் செலவு வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டாமா? வேலைவாய்ப்பை உருவாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை என்றால், வேலை தேடும் இளைஞரையும் வேலை வழங்கும் நிறுவனத்தையும் இணைக்கும் அமைப்புகளும் தடையின்றி செயல்பட வேண்டும். வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞனுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நேரத்தில், அந்த வாய்ப்பைத் தேடும் பாதையிலும் செலவு அதிகரித்தால், இது எந்த வகையான வளர்ச்சி? இளைஞர்களுக்கு வெறும் கல்விச் சான்றிதழ்கள் மட்டும் போதாது. வேலை வேண்டும். நிலையான வருமானம் வேண்டும். பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும் அந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தேவையற்ற செலவுகள் தடையாக மாறாத வகையில், வேலைவாய்ப்பு சார்ந்த சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேலை தேடும் தலைமுறையின் சுமையை அதிகரிப்பதைவிட, வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில்தான் மத்திய அரசின் கவனம் இருக்க வேண்டும். இளைஞர்களின் கைகளில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்குப் பதிலாக, பணிநியமன ஆணைகள் இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் வழங்கல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மறுபரிசீலனை செய்து, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஏற்ற வரிச்சூழலை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cant-the-gst-on-employment-services-be-reconsidered-velmurugan-asks




