உளவன் 13OTP-யால் சிக்கிக் கொண்ட ரஷ்ய உளவாளி! “குசு போட்டுக்கலாமா? அந்த சத்தத்துக்கு பர்மிஷன் உண்டா?” இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தில் வரும் அரசியல் நையாண்டி வசனங்களில் இதுவும் ஒன்று. இரும்புக் கோட்டை வல்லரசை நோக்கி ஜெய்சங்கர்புரத்து மூத்த குடிமகன் கேட்ட கேள்வி இது. அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை பகடி செய்யும் காட்சியில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கும். அதற்கு, இரும்புக் கோட்டையின் எடுபிடி சொல்லும் பதில் அராஜகத்தின் உச்சமாக இருக்கும். மீறி விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள்? குசு போடுவதை அல்ல, அணுகுண்டு சோதனை நடத்தியதை? இப்படியொரு இக்கட்டான சூழல் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவுக்கு எழுந்தது. வளிமண்டல மாதிரிகளை (Airborne Sampling) எடுத்து சோதனை செய்வது அமெரிக்காவின் வழக்கம். வானிலை முன்னறிவிப்புக்கு, காற்றின் தரத்தை ஆய்வு செய்ய என சொல்லிக் கொள்ளும். ஆனால், அதற்கெல்லாம் கிடையாது. எந்த நாடும் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தி இருக்கிறதா? அதைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு அது. 1949 செப்டம்பர் 3-ம் தேதி. காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புறப்பட்டது WB-29 விமானம். வழக்கம் போல பசிபிக் பெருங்கடலில் அலாஸ்கா அருகே மாதிரியை சேகரித்தது. சோதனையில் அசாதரணமான கதிரியக்கம் இருந்தது. காற்றின் தரத்தைக் கண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் மிரண்டனர். அணு ஆயுதத்தை சோதித்துப் பார்த்த ஒரே நாடு - அமெரிக்காவுக்கு மட்டுமே இந்தப் பெருமை சொந்தம். இப்போது இந்த ஏகபோக பெருமையில் குறுக்கே வந்து நின்றது ரஷ்யா. (அணுகுண்டை மக்கள் மீது வீசி சோதித்துப் பார்த்த சிறுமை அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தம்.) உடனே, அதிபர் ஹாரி ட்ருமனுக்கு தகவல் கொடுத்தனர். வல்லரசு அதிபர் அதிர்ச்சியில் உறைந்தார். ‘ரஷ்யா கட்டாயம் அணுஆயுத சோதனை நடத்தும்.’ ட்ரூமன் உறுதியாக எதிர்பார்த்திருந்தார். ஆனால், அது அவ்வளவு சீக்கிரத்தில் அது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தனர். இன்று நடந்தே விட்டது. ஜோசஃப் ஸ்டாலின் இனி என்னென்ன ஆட்டம் போடுவாரோ… நினைக்க நினைக்க ட்ரூமனின் ஈரற்குலை நடுங்கியது. ஜெய்சங்கர் புரத்துக்காரன் கொட்டாவி விட்டானா? அல்லது ஏப்பம் விட்டானா? நாற்றம் வருகிறதே… பயப்படும் அளவுக்கு குசுதான் போட்டானா? கண்டுபிடிக்க வேண்டுமல்லவா. உண்மையிலேயே அணுகுண்டை வெடித்து சோதித்துப் பார்த்ததா? அல்லது கதிரியக்கக் கசிவா? ரஷ்யா என்னதான் செய்தது? முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தர விஞ்ஞானிகளுக்கு உத்தரவிட்டார். இரும்புக் கோட்டை அதிபர் அல்லவா. பூமியின் மேற்பரப்பில் கதிரியக்கச் சிதைவு நிகழ்வதன் மூலம், இயற்கையாகவே பல கதிரியக்க ஐசோடோப்புகள் தோன்றுகின்றன. ஆனால், அலாஸ்கா அருகே காற்றில் இருந்த ஐசோடோப்புகளின் கலவை செயற்கையாகவும் அசாதரணமான அளவிலும் இருந்தன. ஆய்வுகளின் முடிவில் ரஷ்யா அணுகுண்டை வெடித்துத்தான் சோதனை நடத்தியது நிரூபணமானது. இனி என்ன செய்ய முடியும்? உலகின் முன் எதிரியை அம்பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம். செப்டம்பர் 23-ம் தேதி வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது: அண்மையில் சோவியத் ரஷ்யா அணுகுண்டை வெடிக்கச் செய்து சோதனை நடத்தியது. அமெரிக்க அணு ஆயுத திட்டங்களை ரஷ்யா திருடி உள்ளது. திருட்டுத் தொழில்நுட்பத்தால் ரஷ்யா அணு ஆயுத நாடாக காட்டிக் கொள்கிறது. அமெரிக்கா அடுக்கடுக்காக குற்றம்சாட்டியது. அறிக்கை வெளியிட்ட கையோடு, மன்ஹாட்டன் திட்ட அதிகாரிகளை அழைத்து கடிந்து கொண்டார். எப்படி மன்ஹாட்டன் திட்டம் கசிந்தது? ரகசியங்களை கடத்திய அந்த குள்ளநரி யார்? உடனே கண்டுபிடிக்க உத்தரவிட்டார் அதிபர் ட்ரூமன். அமெரிக்காவின் அணு ஆயுத திட்டத்திற்கு ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்று பெயர். அணு ஆயுதம் என்பது பெருமைப்பட்டுக் கொள்ளும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பல்ல. ஆபத்தான அணு யுகத்தின் (Atomic Age) தொடக்கம். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகஸ்ட் 1939-ல், அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெட்ல்ட்டுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதினார். “ஜெர்மனி அணு ஆயுத சோதனையை தொடங்கப் போகிறது, அமெரிக்கா சுதாரித்துக் கொள்ளவும்.” அப்போது தொடங்கியது இந்தத் திட்டம். வெளியுலகத்துக்கு தெரியாமல் ரகசியமாக நடந்தேறின. திட்ட அலுவலகம் அமைந்திருந்த மன்ஹாட்டன் தீவு பெயரையே திட்டத்திற்கு சூட்டினர். உச்சக் கட்டத்தில் இருந்தது இரண்டாம் உலகப் போர். அப்போது அணுகுண்டை வெடித்து சோதித்துப் பார்த்தது அமெரிக்கா. 1945, ஜூலை 16 அன்று Trinity சோதனை வெற்றிகரமாக முடிந்தது. சில நாட்களிலேயே இரண்டு அணு குண்டுகளை ஜப்பான் மீது வீசி ஆயிரக் கணக்கானவர்களை கொன்றொழித்தது. லட்சக் கணக்கானவர்களை முடமாக்கியது (ஆகஸ்ட் 6, ஹிரோஷிமா - ஆகஸ்ட் 9, நாகசாகி). இந்தப் பேரழிவின் குருதிச் சிவப்பு மையில்தான் இரண்டாம் உலகப் போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. மன்ஹாட்டன் திட்டத்திற்கு அன்றைய மதிப்பில் இரண்டு பில்லியன் டாலர் செலவு. 1,30,000 ஊழியர்களின் ஐந்தாண்டு கடின உழைப்பு. இவ்வளவுக்குப் பிறகுதான், அதி பயங்கரமான ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பேரும் பெருமையும் அமெரிக்காவுக்கு கிடைத்தது. ஒரேயொரு சுவிட்ச்சை தட்டி, அமெரிக்காவின் இந்தக் கர்வத்தை எளிதாக தூக்கி கடாசியது ரஷ்யா. அதெல்லாம் சரி. அணுகுண்டு சோதனையை நடத்தி, அமெரிக்காவையே திணறடித்த ரஷ்யா ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. அணு குண்டு சோதனை நடத்தியதை ரஷ்யா பிரஸ்தாபித்துக் கொள்ளவுமில்லை; அமெரிக்கா அறிவித்த உடனே, ‘ஆமாம், வெடித்தோம், அதற்கு இப்போ என்ன?’ என நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளவுமில்லை. அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தது. சோதனை தோல்வியில் முடிந்தால் அவமானம். வெற்றிகரமாக முடியட்டும். தொழில்நுட்ப திருட்டுக் குட்டு வெளியாகி விடும் என்ற பயம். தம்பட்டம் அடித்து அமெரிக்காவின் எதிர்வினையைத் தூண்ட வேண்டாம். இந்தக் காரணங்களால் ரஷ்யா மூச்சு விடவில்லை. குசு போட்டதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது. கள்ள மெளனம் சாதித்து, உளவியல் ரீதியாக அமெரிக்காவை துவம்சம் செய்த திருப்தி ஜோசஃப் ஸ்டாலினுக்கு. ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு வாய் திறந்தது. மார்ச் 1950-ல்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. “இது சோவியத் ரஷ்யாவின் சுயாதீனமான முயற்சிக்கு கிடைத்த வெற்றி.” சோவியத்தின் அங்கமாக அப்போதிருந்த கஜகஸ்தானில், ஆகஸ்ட் 29-ம் தேதியே அணு ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தி இருந்தது. அந்தத் திட்டத்தின் பெயர் RDS - 1. ஒரு மாதம் கழித்துத்தான் அமெரிக்காவுக்கே தெரிய வந்தது. மறுபக்கம், மன்ஹாட்டன் திட்டத்தை கசிய விட்ட நபர்களை அமெரிக்கா மோப்பம் பிடித்து வைத்திருந்தது. அவர்களில் ஒருவரை கட்டம் கட்டியது. அந்த ஆளை இப்போது தூக்க வேண்டும். ரஷ்யாவைக் கண்காணிப்பதற்காக 1944-ம் ஆண்டு தொடக்கத்திலேயே Section IX என்ற பிரிவை பிரிட்டன் தொடங்கியது. செங்கொடி புரட்சி முழக்கம் கேட்டு விடக்கூடாது என்பதில் ஐரோப்பவைப் போலவே அமெரிக்காவும் விழிப்போடு இருந்தது. ஆனால், பிரிட்டனுக்கு முன்பே சோவியத் ரஷ்யா மீது அமெரிக்காவுக்கு சந்தேகம் வலுத்து விட்டது. 1939-ம் ஆண்டு முதலே ரஷ்யாவின் தந்தி தகவல்களை இடைமறித்து சேகரிக்கத் தொடங்கினர். இதற்கு வெனோனா திட்டம் என பெயரிட்டனர். (Venona Decryption Project). எவ்வளவு முயன்றும் ரஷ்யாவின் சந்தேகக் குறியீடுகளை அமெரிக்காவால் உடைக்க முடியவில்லை. இருந்தாலும் இடைமறித்து தகவல்களை உறிஞ்சும் வேலையை மட்டும் அமெரிக்க நிறுத்தவில்லை. ரகசிய தகவல்களை (Cipher Text) அனுப்ப ஒவ்வொரு நாடும் பிரத்யேகமான முறைகளை பின்பற்றின. ஜெர்மன் உளவுத்துறை Enigma எந்திரத்தை பயன்படுத்தியது. அதேபோல ரஷ்யா One Time Pad (OTP) என்ற முறையைப் பயன்படுத்தியது. இதில் A-0, B-1, C-2…Z-25 என 26 எண்களே பிரதானம். ரகசிய தகவல்களின் ஆங்கில எழுத்துக்களுக்கு 0-26-க்குள் எண்கள் வழங்கப்படும். அந்த எண்களுடன், KEY LETTERS-ல் உள்ள எழுத்துக்களுக்கு இணையான எண்கள் கூட்டப்படும். கூட்டப்பட்ட எண்களுக்கு இணையான ஆங்கில எழுத்துக்களைக் கொடுத்தால், ரகசிய தகவலின் Cipher Text கிடைத்து விடும். அனுப்ப வேண்டிய தகவல்: Manhattan Key Letters: America. அனுப்ப வேண்டிய தகவலைவிட Key Letters குறைவாக இருந்தால், தொடக்கத்திலிருந்து அதே எழுத்துக்களை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகள் கையில் Cipher Text கிடைத்தாலும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. மிக மிக பாதுகாப்பான தகவல் அனுப்பும் முறை இது. KEY LETTERS தெரியாமல் Cipher Text-டை உடைக்கவே முடியாது. அனுப்புபவரும் பெறுபவரும் வைத்திருக்கும் ஒரே மாதிரியான KEY LETTERS-கள் குறியீடை மாற்றி அசல் தகவல்களை புரிந்து கொள்ள உதவும். முதலிலேயே உருவாக்கப்படும் KEY LETTERS-கள் தனித் தனி தாள்களில் அச்சிடப்பட்டு ஒரு புத்தகமாக (Pad), உளவு பார்க்கும் ஏஜெண்ட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு நாளைக்கு ஒரு தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அல்லது ஒரு தகவலை அனுப்பிய KEY LETTERS-களை மறுமுறை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. இரண்டாம் உலகப் போர் காலக் கட்டத்தில், KEY LETTERS-கள் அச்சிடப்பட்ட புத்தகங்களை அனுப்புவதில் கடும் சிரமங்கள் இருந்தன. அதனால், பயன்படுத்திய KEY LETTERS-களை மீண்டும் பயன்படுத்த, ரஷ்ய உளவுத்துறை தன்னுடைய ஏஜெண்ட்டுகளுக்கு அனுமதி அளித்தது. விழிப்போடு காத்திருந்த வெனோனா குழுவினருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்த பாதுகாப்பு குறைபாட்டைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, கடினமாக முயன்று ரஷ்ய ஏஜெண்ட்டுகள் அனுப்பிய தகவல்களை உடைத்தனர். இறுதியில், கிளாஸ் ஃபூக்ஸ் (Klaus Fuchs) என்ற பிரிட்டன் குடியுரிமை பெற்ற ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட அணு விஞ்ஞானி தகவல்களை ரஷ்யாவுக்கு கடத்தியது உறுதியானது. அவருக்கு 14 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை. ஆனால், தகவல்களைக் கடத்த உதவிய அமெரிக்க தம்பதிக்கு மரண தண்டனை. அணு ஆயுதம் தொடர்பான தகவல்களை எதிரி நாட்டிடம் பகிர்ந்து கொண்டதற்காக மரண தண்டனை (மின் இருக்கை தண்டனை) விதிக்கப்பட்ட முதல் நபர்கள் இவர்கள்தான். (தொடரும்) சிவப்பு ட்ரோஜன் குதிரை | உளவன் 12 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/literature/ulavan-a-series-on-second-world-war-spy-world-part-thirteen




