சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மெமெ வீதியைச் சேர்ந்தவர் பழனிகுமார், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே 21-ம் தேதி காரைக்குடி அரசு மருத்துவமனையில் நான்காவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. வறுமையில் வாடும் இந்த குடும்பத்தை நோட்டமிட்ட ஒரு கும்பல், மருத்துவமனையிலேயே லட்சுமியிடம், "ஏற்கெனவே மூணு பெண் குழந்தைங்க இருக்கு. வறுமையில நாலாவது குழந்தையை எப்படி வளர்க்கப் போறீங்க? பேசாமல் வித்துடலாம்" என ஆசைவார்த்தை கூறி, மூளைச்சலவை செய்துள்ளது. ஆரம்பத்தில் லட்சுமி இதற்கு மறுத்ததாகக் கூறப்பட்டாலும், சூழ்ந்து நிற்கும் வறுமையால் திரைமறைவில் டீல் பேசப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி லட்சுமியின் வீட்டிற்கே வந்து குழந்தையைக் கேட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு சென்னை தம்பதி அனுப்பியதாகக் கூறி 3 பெண்கள் லட்சுமியின் வீட்டிற்குள் நைசாக நுழைந்துள்ளனர். அவர்கள் லட்சுமியிடம் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துவிட்டு, 45 நாள்களேயான அந்தப் பிஞ்சு குழந்தையை வாங்கிச் சென்றுள்ளனர். குழந்தை விற்பனை அதன் பிறகு, குழந்தையைக் காணவில்லை என்று லட்சுமி போலீசில் புகாரளிக்க, காரைக்குடி தெற்கு போலீஸார் களமிறங்கி குழந்தையை அதிரடியாக மீட்டனர். ஆனால், போலீஸாரின் விசாரணையில் தான் கதையே வேறு என்பது தெரியவந்தது! `மீதி காசு வராததால் வந்த புகார்!' இந்த விவகாரம் குறித்து காரைக்குடி ஏ.எஸ்.பி ஆஷிஷ் புன்யாவை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர், "வறுமையில் இருக்கிறதைக் குறிவச்சு, மருத்துவமனையிலேயே சில பெண்கள் லட்சுமியை மூளைச்சலவை செஞ்சிருக்காங்க. 'ஏற்கெனவே மூணு பெண் பிள்ளைங்க இருக்கு, வறுமையில இதையும் வச்சு எப்படி வளர்ப்பீங்க? பேசாமல் வித்துடலாம்' என்று காசு கொடுத்து எடுத்துட்டுப் போயிருக்காங்க. ஆனால் அந்தக் குழந்தையின் தாயாரே அதற்குச் சம்மதம் தெரிவித்துத்தான் அந்தக் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விலை பேசி விற்க முற்பட்டுள்ளார். சென்னை தம்பதி அனுப்பியதாக வந்த பெண்கள், லட்சுமியிடம் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்தைக் கொடுத்துவிட்டு குழந்தையை வாங்கிட்டுப் போயிட்டாங்க. ஆனால், மீதி பேசப்பட்ட 2 லட்சம் ரூபாய் காசை அவங்க கொடுக்கவில்லை. 'ஐந்து லட்ச ரூபாய்க்குப் பேசிட்டு மூணு லட்சத்தை மட்டும் கொடுத்துட்டு ஏமாத்திட்டாங்களே' என்று லட்சுமி யோசிச்சிருக்காங்க. காசு கைக்கு வராத ஆத்திரத்திலும், குழந்தையைக் கொடுத்துட்டோமே என்ற எண்ணத்திலும்தான் அவர் காவல் நிலையத்திற்கே வந்து புகார் கொடுத்திருக்கார். இது குழந்தை கடத்தல் இல்லை. குழந்தை விற்பனை. குழந்தையின் தாயாரின் சம்மதத்தோட நடந்த டீல்தான் இது எனத் தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்களின் முழுப் பின்னணியையும் விசாரித்து வருகிறோம். லட்சுமி காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடனே நாங்க அலர்ட் ஆகி, தீவிர விசாரணையில் இறங்கி குழந்தையைப் பத்திரமாக மீட்டு இப்போது உரியவர்களிடம் ஒப்படைச்சிட்டோம். ஆனால், குழந்தையைத் தத்துக்கொடுப்பதில் எந்தவொரு சட்டவிதிகளும் இங்கு பின்பற்றப்படவில்லை. சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் மிகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/karaikudi-schocker-baby-selling-case




