சென்னை, ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக செய்த அதே தவறை தற்போதைய தவெக அரசும் செய்திருப்பதால் ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்தும், வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடர் கொண்டு பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதாலும் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க இணையத்தில் நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களில் பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் (Full Gream Milk) உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் பலமடங்கு திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பாலினை தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாமல் திணறி வருவதோடு, குறைந்த வருவாயில் வாழ்க்கையை ஓட்டி வரும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். மேலும் சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில் பால் முகவர்களுக்கான ஆவின் பால் விநியோகத்தை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 25% க்கும் மேல் ஆவின் நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட சூழலில் இன்று (15.09.2026) 10% வரை ஆவின் பால் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகத்தால் மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் அந்த உத்தரவு இன்று (15.09.2026) அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரில் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் பாக்கெட் விநியோகத்தை செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் என்பது "உடலுக்கேற்ற வகையில் ஆடைகளை வடிவமைத்து வெட்டி, தைக்காமல், ஆடைகளுக்கேற்ற வகையில் உடலை வெட்டி, காயப்படுத்துவதைப் போல் உள்ளது.” ஏற்கனவே கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் இதுவரை ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாக ஆட்சியமைத்த ஜோசப் விஜய் அவர்களாவது ஆவினில் மாற்றத்தை கொண்டு வருவார் என்கிற எண்ணத்தில் ஆவினை மீட்டெடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளை செயல்படுத்த பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி அவர்களை கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அதற்கான தரவுகளை அளித்து பேசியும், முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக பலமுறை கடிதங்கள் அனுப்பியும் கூட எந்த ஒரு மாற்றத்திற்கான முயற்சியும் இதுவரை முன்னெடுக்கப்படாததோடு, "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆவினை அழிவை நோக்கி கொண்டு செல்வது பால் முகவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.” மேலும், சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் ஆவின் நிறுவனம் நிதி இழப்பில் சென்றாலும் அந்த இழப்பு ஆவினை முடக்கி விடாது. காரணம் மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகை வரியாக திணிக்கப்படும். அதே சமயம் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6.00 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பால் நிறுவனங்களும் விவசாய பெருமக்களுக்கான கொள்முதல் விலையை அதே அளவு உயர்த்தி வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் அவ்வாறு தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினால் அந்நிறுவனங்களுக்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை அந்நிறுவனங்களே ஈடுசெய்து கொள்ள வேண்டும் என்பதால் வேறு வழியின்றி அந்த பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ப "தனியார் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயர்த்தும்” வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஆவின் மற்றும் தனியார் பாலுக்குமான விற்பனை விலை என்பது மலைக்கும், மடுவிற்குமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறைந்தபட்சம் லிட்டருக்கு 19.00 ரூபாய் முதல் 24.00 ரூபாய் வரை விற்பனை வித்தியாசம் இருக்கும் நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில் பொதுமக்கள் விற்பனை விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும், ஆனால் ஏற்கனவே ஆவினில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதிய அரசுக்கு அவப்பெயரே பரிசாக கிடைக்கும். எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்கு தங்குதடையற்ற பால் விநியோகம் தொடர வேண்டுமானால் ஆவினுக்கான பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ற வகையில் விற்பனை விலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை விட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும் என்பதை மனதில் கொண்டு ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் தவெக அரசுக்கு மேலும், மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆவின் பால் விற்பனை விலையை மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல விற்பனை விலையில் சீர்திருத்தம் செய்து தட்டுப்பாடற்ற பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும், அமுல், நந்தினி போன்று அரசியல் தலையீடற்ற, சுயசார்போடு இயங்குகின்ற வகையில் ஆவின் நிறுவனத்தை தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய ச.ஜோசப் விஜய் அவர்களையும், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி அவர்களையும் மற்றும் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aavin-milk-sales-down-by-10-milk-agents-association-alleges




