இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. ஆணவக்கொலை, தற்கொலை என்றெல்லாம் வெளிவருகிற ஒவ்வொரு செய்தியும் நம் மனட்சாட்சியை உலுக்குகிறது. மயிலாடுதுறை அருகே, 20 வயது இளைஞரும் 16 வயது சிறுமியும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட, ஆணவக்கொலை கோணத்தில் விசாரணை நடக்கிறது. மதுரை, சோழவந்தான் அருகே, தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பியதால் இளைஞரும் இளம்பெண்ணும் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். அடுத்த சில நாள்களில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் பெற்றோர், காதலை எதிர்த்ததால் காதலன் தற்கொலை செய்து கொள்ள, தொடர்ந்து காதலியும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவை தனித்தனி சம்பவங்கள் அல்ல. இந்த மரணங்களை இணைக்கும் ஒற்றைப் புள்ளி சாதி. `எவிடன்ஸ்’ அமைப்பு, 2017 - 2025 காலகட்டத்தில் தமிழகத்தில் 59 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகவும், கடந்த 75 நாள்களில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. `இன்னும் வெளிச்சத்துக்கு வராதவை நிறைய இருக்கலாம்' என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்து மிகத்தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆணவக்கொலை மட்டுமல்ல. ஆணவத் தற்கொலை, ஆணவச் சித்திரவதை, சமூக ஒதுக்கல் உள்ளிட்ட 41 வகையான ஆணவக் குற்றங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரே சாதிக்குள்ளேயே காதலித்த பிள்ளைகளும் உயிர் பறிக்கப்படுகிறார்கள். சாதியோடு சேர்த்து, வர்க்கம், ஆணாதிக்கம் என இந்தக் கொடுமைகளுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்த பிள்ளைகள் மீது பெற்றோருக்கு நிறைய கனவுகள் இருக்கலாம். ஆனால், தகுந்த பக்குவம் வந்தபிறகு, தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. உயிருக்கு உயிராக வளர்த்த பிள்ளைகள் மீதே வன்முறையைப் பிரயோகிக்கும் அளவுக்கு எங்கிருந்து வருகிறது இந்த வன்மம்? பிள்ளையே போனாலும் தங்கள் சாதியையும் கௌரவத்தையும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வெறியால் யாருக்கு இங்கே லாபம்? நெடுங்காலமாக, ஆணவக்கொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை இங்கே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உச்ச நீதிமன்றமும் பலமுறை வலியுறுத்திவிட்டது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் 2025, நவம்பரில் அமைக்கப்பட்ட ஆணையம் இன்னும் பரிந்துரைகளை வழங்கவில்லை. தற்போதைய அரசேனும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். காதலர்களுக்கு ஒரு வார்த்தை. காதல் என்பதே நம்பிக்கை தான். போராடுவதற்கான துணிவையும், எதையும் எதிர்கொள்வதற்கான மனோதிடத்தையும் வழங்குவதே உண்மையான காதல். தற்கொலை என்பது கோழைத்தனம். உங்கள் காதலுக்கே அது அவமானம். காதலின் பெயரில் ஒவ்வோர் உயிர் பறிபோகும் போதும் ஒரு கனவு, ஓர் எதிர்காலம், ஒரு குடும்பம் சிதைகிறது. காதலர்கள் மீது கருணை காட்டட்டும் இந்தச் சமூகம்! உரிமையுடன், ஸ்ரீ ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/governance/namakkulle-editorial-page-july-28-2026




