சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கடந்த 23 ஆண்டுகளாக சில்லரை மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ரூ.15 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி செலுத்தி வருகிறது. அரசின் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு அளவில் பங்களிப்பு செலுத்தும் இந்த டாஸ்மாக் நிறுவனத்தின் பணியாளர்கள் 23 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்தப் பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கும், தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டில் 1981 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பணி நிரந்தரத் தகுதி வழங்கல் சட்டத்திற்கு முரணாக அரசு நிறுவனம் செயல்படுவது சரியல்ல. மேலும், நிலையாணை சட்டப்படி, டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நிலையாணை உருவாக்காமல், பணி வரன்முறை ஏதுமின்றி பணியாளர்களை பாதுகாப்பற்ற அசாதாரண பணிச் சூழலுக்கு நெட்டித் தள்ளியுள்ளது. கொள்முதல் முனையில் ஏற்பட்டு வந்த நிதிக் கசிவு தடுக்கப்பட்டு கூடுதல் வருவாய் ஈட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கையை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்கி தருவதில் அக்கறை காட்ட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழ்நாடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டம் பொருந்தும் என மாண்பமை சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் மதிக்கவில்லை என்ற புகாரும் உள்ளது. இந்த நிலையில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் காலிப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28.08.2026 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. டாஸ்மாக் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் தலையிட்டு, பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சுமூகத் தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-intervene-and-resolve-the-demands-of-tasmac-employees-communist-party-of-india



