Full artikkel
சென்னையின் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் அருகே மாலை நேரத்தில் மக்கள் கூட்டத்துக்கிடையே, இளைஞர் ஒருவரின் வித்தியாசமான முயற்சி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. டூ வீலரிலேயே சிறுதானிய உணவுகள், பாரம்பர்ய பலகாரங்கள் மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மற்றும் மசாலா பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார், 27 வயதான கிஷோர் பாபு. டிப்ளமோ படிப்பை முடித்த இவர், இதற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினீயராக வேலை பார்த்திருக்கிறார். தனது அக்காவின் யோசனையின் மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகளை விற்பனை செய்து வருகிறார். ``எல்லாரும் இப்போ வேகமான வாழ்க்கையில இருக்காங்க. வீட்டுல எல்லா பொருளையும் தயாரிக்க நேரம் கிடைக்கலை. அதனால நாங்க வீட்டுலயே சுத்தமா, நல்ல பொருளை தயாரிச்சு மக்களிடம் கொண்டு வரணும்னு நினைச்சோம்" என்கிறார், கிஷோர். டூ வீலரே கடை: பொதுவாக வியாபாரம் என்றாலே கடை, வாடகை, ஊழியர்கள் எனப் பெரிய முதலீடு தேவைப்படும். ஆனால், கிஷோர் அதற்கு மாற்றாக ஓர் எளிய தீர்வை தேர்ந்தெடுத்துள்ளார். டூ வீலரிலேயே அனைத்து பொருள்களையும் எடுத்துச் சென்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 அல்லது 10 மணி வரை விற்பனை செய்கிறார். கிஷோர் பாபு “கடை வைக்கிற அளவுக்கு இப்போதைக்கு செலவு பண்ண முடியாது. அதனால டூ வீலர்லயே ஆரம்பிச்சோம். மக்களுக்கும் வசதியா இருக்கு. எங்களுக்கும் சுலபமா இருக்கு” என்று கூறுகிறார். அக்காவின் கனவு, தம்பியின் உழைப்பு : இந்த முழு முயற்சிக்கும் பின்னால் இருப்பது அவர் அக்காவின் பல வருட கனவு. சிறுவயதிலிருந்தே ஏதாவது ஒரு சிறிய தொழில் தொடங்கி மக்களுக்கு நல்ல பொருள்களை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். அதையே இன்று இருவரும் சேர்ந்து நனவாக்கி வருகிறார்கள். “எல்லாமே அக்காவோட ஐடியா. நான் அவங்களுக்கும் சப்போர்ட் பண்ணி செய்றேன்” என்று புன்னகையுடன் சொல்கிறார் கிஷோர். வீட்டில் உணவு தயாரிப்பு ``எல்லாரும் இப்போ வீட்டில் எல்லாத்தையும் செய்து சாப்பிடுவது குறைந்து வருகிறது. சீக்கிரமாக தயாரித்து சாப்பிடக்கூடிய உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால் நல்ல பொருள்களை நாங்களே வீட்டில் தயாரித்து மக்களிடம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறோம். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. மூன்றரை ஆண்டுகளாக எங்களிடம் வாங்கும் நிரந்தர வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். நாங்கள் கொடுக்கும் உணவுப் பொருள்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் சேர்ப்பதில்லை. உணவு நிறமிகளோ, பிரிசர்வேட்டிவ்களோ பயன்படுத்துவதில்லை. செக்கு நல்லெண்ணெய், அச்சு வெல்லம் மற்றும் இயற்கையான பொருள்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். கறுப்பு உளுந்து களி, பல்வேறு வகையான லட்டு, உருண்டைகள், அல்வாக்கள், கட்லெட்டுகள், தொக்கு, ஊறுகாய், வடகம் மற்றும் பொடி வகைகள் என பல பாரம்பர்ய மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்" என்கிறார் கிஷோர் பாபு. கிஷோர் பாபு ``கருப்பு உளுந்து களி கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலிக்கு ரொம்ப நல்லது. அதுல செக்கு நல்லெண்ணெய், அச்சு வெல்லம் தான் பயன்படுத்துறோம். அதே மாதிரி அசோகா அல்வாவுல கலர் எதுவும் பயன்படுத்துறது கிடையாது. பாசிப்பருப்பு, நெய், குங்குமப்பூ சேர்த்து தயாரிக்கிறோம். இளநீர் அல்வா, கேரட் அல்வா, மாம்பழ அல்வா, தேங்காய்ப்பால் அல்வா, புரோட்டீன் அல்வா, வாழைப்பழ அல்வா மாதிரி பல வகையான அல்வாக்களும் இருக்குது. கட்லெட்டுல மரவள்ளிக்கிழங்கு காரம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஸ்வீட் ரெண்டு வகையும் இருக்கு. அதையும் எண்ணெயில் பொரிக்காம தோசைக்கல்லுல சுட்டுத்தான் தயாரிக்கிறோம். அதே மாதிரி எள்ளு உருண்டை, கடலை உருண்டை, மல்டிகிரைன் லட்டு, கருப்பு உளுந்து லட்டு, மாலட்டு, தேங்காய் பர்பி, தக்காளி தொக்கு, புளிக்காய்ச்சல், ஆவக்காய் ஊறுகாய், வடகம், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி என பல பாரம்பர்ய உணவுப் பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இவை அனைத்தும் நல்ல பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன" என்கிறார் கிஷோர் பாபு. கிஷோர் பாபு ஆரோக்கியமான உணவுகளுக்கு மீண்டும் திரும்பும் மக்கள்: ஒரு காலத்தில் மறைந்து போகத் தொடங்கிய பாரம்பர்ய உணவுகளை, தற்போது மக்கள் மீண்டும் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். “இப்போ மக்கள் பழைய உணவு முறைகளுக்குத் திரும்ப ஆரம்பிச்சுட்டு இருக்காங்க. ஹெல்தி ஃபுட்ஸ் மேல அதிக ஆர்வம் காட்டுறாங்க” என்று கிஷோர் பாபு கூறுகிறார். இதனால் இவர்கள் விற்கும் உணவு பொருள்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. - ராமலட்சுமி சி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under



