நம் மனம் பெரும்பாலும் இருப்பவற்றை மறந்து விட்டு, இல்லாதவற்றை நினைத்து ஏங்கும். ஆடம்பரத்தை எதிர்பார்த்து வருந்தும் மனிதர்களுக்கு மத்தியில் அத்தியாவசியத்திற்கே போராடுபவர்களும் உண்டு. நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதை விட நம்மால் என்ன முடியும் என்று சிந்திப்பவர்களே வெற்றி அடைகிறார்கள். சவால்களை சாதனைகளாக மாற்றுபவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். அந்த வகையில், கண் பார்வை இல்லாமலேயே புத்தகம் எழுதி அசர வைத்துள்ளார் திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகிலுள்ள ராயக்கோட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹரன் வீரப்பன். பிறவியில் இருந்தே பார்வைக் குறைபாடு இருந்தாலும் தன் கல்வியிலும் முயற்சியிலும் குறைபாடு இல்லாதவர். ஏழ்மையான குடும்பப் பின்னணியில், உடன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகளையும் பார்த்துக் கொள்ளும் பொருட்டு பெற்றோர்கள் சொந்த ஊரிலேயே இருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே கல்விக்காகத் தொடக்கம் முதல் விடுதி வாழ்க்கையில் வளர்கிறார் ஹரிஹரன். 1 முதல் 4 - ம் வகுப்பு வரை திருச்சியில் உள்ள பள்ளியில் படித்தார். 5 முதல் 10 - ம் வகுப்பு வரை மதுரையில் உள்ள பார்வைக் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றார். இங்குதான் பிரெய்லி கற்றல் முறை, கணினிப் பயிற்சி, விளையாட்டு முதலியவற்றை அறிந்து கொள்கிறார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் 2-வது இடம் பிடித்தார். 2019 -ஆம் ஆண்டு, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய பாரா ஒலிம்பிக் போட்டியில் மாவட்ட அளவில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2-வது இடமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது இடமும் பிடித்து பாராட்டு பெற்றார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பை திருவண்ணாமலையில் உள்ள சிறப்பு பள்ளியில் பயின்றார். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 -க்கு 506 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-வது இடம் பிடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். அரசு சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து Merit list - ல் இடம் கிடைக்கிறது. சென்னை புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் தன் உயர்கல்வியைத் தொடங்கினார். 2022 -ல் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய கட்டுரையை வாசித்து, அந்நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரில் இவரும் ஒருவர். இதன் பின்னர்தான் பேராசிரியர்களின் தூண்டுதலின்படி பேச்சுப் போட்டிக்குச் செல்லத் தொடங்குகிறார். 2024 -ஆம் ஆண்டு திருச்சி அரசு சட்டக் கல்லூரிக்கு இடம் மாறுதலில் வருகிறார். இவருடைய திறமைக்கு வாசல் திறந்து விட்டது திருச்சி மாநகரம். பல்வேறு தமிழ் அமைப்புகளின் மேடையில் தொடர்ச்சியாகக் கால் பதித்தார். பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை என்று அனைத்திலும் புகுந்து விளையாடினார். இதுவரை பேச்சு, கவிதைப் போட்டியில் மட்டும் பரிசுத் தொகையாக சுமார் 1 லட்சம் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், தமிழ்த் தொண்டர் விருது,சிறந்த பேச்சாளருக்கான விருது உட்பட 15 விருதுகள் குவித்துள்ளார். இவருடைய திறமைக்கு முத்தாய்ப்பாக கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆளுநரின் கரங்களால் பரிசு பெற்றார். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் சமூக சேவை அறக்கட்டளையுடன் இணைந்து இதுவரை, 10-க்கும் மேற்பட்டப் பள்ளிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 'மாண்புமிகு பறை' எனும் திரைப்படத்தில் 2 நிமிடம் திரையிலும் தோன்றியுள்ளார். இயற்கையிலேயே எழுத்து வேட்கைக் கொண்ட இந்த மாணவனுக்கு 'நாம் ஏன் புத்தகம் எழுதக் கூடாது? ' என்கிற சிந்தனை துளிர்க்கிறது. சமூகம், சாதி, காதல், பெண்ணியம் முதலியக் கருத்துக்களை மையப்படுத்தி 'என் பார்வையில்' என்கிற புத்தகத்தை எழுதி, கடந்தாண்டு திருச்சி புத்தகத் திருவிழாவில் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றார். தற்போது சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் ஹரிஹரனுக்கு, வழக்கறிஞராகி மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பது விருப்பம். மேலும், சிவில் நீதிபதியாக வேண்டும் என்பது இவர் லட்சியம். உற்சாகத்துடன் நம்மிடம் பேசிய ஹரிஹரன், "பள்ளிக்காலத்தில் எழுத்துக்களைக் கற்றுக் கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. சக மாணவர்களின் கேலி கிண்டல்கள், என் மீதான தனிப்பட்டப் பார்வை போன்றவை எனக்குள் இயல்பிலேயே தாழ்வு மனப்பான்மைக்கு வித்திட்டன. ஆனால் கல்வியையும் திறமையையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பயணித்தேன். இந்தச் சமூகம் என்னைப் போன்றவர்களுக்கு 'பாவப்பட்டு' எதையும் செய்ய வேண்டாம். எங்களையும் நேர்கொண்ட பார்வையில் சமமாக நடத்தினாலே போதும். எந்த ஒரு செயலைச் செய்யும் போதும்,'ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை?' என்று உதாசீனப்படுத்தாமல் இருந்தால் போதும். என்னுடைய குறைபாட்டைக் காரணம் காட்டி, தகுதியிருந்தும் பல இடங்களில் நிராகரிப்பை எதிர் கொண்டுள்ளேன். ஆனால் கல்வியாலும் திறமையாலும் சமூகத்தின் பார்வையை மாற்ற முடியும் என்று முழுமையாய் நம்புகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு நான் சொல்வது, எடுத்தக் குறிக்கோளில் உறுதியாய் இருங்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் பின்வாங்காதீர்கள். நம் வெற்றியை அதிர்ஷ்டத்தின் பெயரில் எழுதிவிட்டு கடந்து போவார்கள். ஆனால் யார் கடுமையாக உழைப்பும் முயற்சியையும் மேற்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிர்ஷ்டம்கூட கை கொடுக்கும். எனவே உற்சாகத்தைக் குறைக்கும் சொற்களுக்கு செவி சாய்க்காதீர்கள். இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல வருவது, உங்களின் இலக்கை நோக்கி தினமும் பயணியுங்கள். தொடர் உழைப்பும் பொறுமையும் தான் வெற்றிக்கான ரகசியம். ஒரு தோல்வியைப் பார்த்தவுடன் 'இது நமக்கு சரிப்பட்டு வராது' என்கிற அவநம்பிக்கையை விதைக்காதீர்கள். என்றைக்கும் சாதனை என்பது அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. மனநலம் பாதிக்கப்பட்டப் பெண்களையும், திருநங்கைகளின் வாழ்க்கைக் குறித்தும் பல நேரங்களில் யோசித்துப் பார்ப்பேன். அவர்களின் வாழ்வு மேம்பட என் கல்வி நிச்சயம் பயன்படும் என்கிற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஹரிஹரன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/features/human-stories/just-treat-us-equally-blind-trichy-student-hariharan-veerappan-turns-challenges-into-achievements




