சென்னை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், துடிப்புடனும் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் மாநில அளவிலான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (22.09.2026) சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம், தரம், காலக்கெடுவிற்குள் நிறைவேற்றுதல் மற்றும் கள அளவிலான கண்காணிப்பு குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெளிப்படைத்தன்மை ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் “அரசால் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்புப் பணிகள் பொதுமக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் தரமாகவும், குறித்த காலத்திற்குள்ளும் நிறைவேற்றப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு அனைத்து நிலைகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும். ஒப்பந்த விதிமுறைகள், அரசாணைகள் மற்றும் நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும், ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இறுதி செய்யப்பட வேண்டும். கட்டுமானப் பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் உரிய பொறியியல் தரநிலைகள் கடைப்பிடிக்கப்படுவதையும், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பணிகளின் தரத்தை பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். முக்கியப் பணிகளில் 3-ஆம் தரப்பு தரத்தணிக்கை மேற்கொண்டு, தணிக்கையில் சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பொதுப்பணித் துறை அரசின் அனைத்து துறைகளுக்கும் கட்டிட, கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. சட்டமன்றம், தலைமைச் செயலகம், சட்டமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகள் உட்பட மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், வருவாய் மற்றும் வணிகவரித்துறை அலுவலகங்கள், சமூகநீதி விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள், BC/MBC விடுதிகள் மற்றும் நீதித்துறை கட்டடங்கள் மற்றும் அதன் குடியிருப்புகள் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு கட்டப்படும் கட்டுமானங்கள், நில மதிப்பிற்கும் நில பயன்பாட்டுக்கும் ஏற்றவாறு தரைத்தளம் மற்றும் 2 தளங்கள் அல்லது 3 தளங்கள் என்ற தற்போது நடைமுறையில் உள்ள கட்டட வடிவமைப்புகளை மாற்றி, உலகத் தரத்தில் பன்னடுக்கு கட்டட அமைப்புகளாக ஏற்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்பட வேண்டும். அரசு கட்டடங்களை மாநிலம் முழுவதும் கள ஆய்வு செய்து, பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் தேவைகளுக்கான மதிப்பீடுகள் தயாரித்தல், கட்டடங்களின் தற்போதைய நிலை, பராமரிப்புத் தேவை, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் நிலுவைப் பணிகளை ஒருங்கிணைந்த Digital Dashboard-ல் பதிவு செய்து காலமுறை ஆய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவசரகால மீட்பு நடவடிக்கை சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மாநில நெடுஞ்சாலைகளில் வாகன எண் மற்றும் வேகத்தைக் கண்டறியும் ANPR மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்களை நிறுவுதல், காவல்துறையின் e-challan அமைப்புடன் ஒருங்கிணைத்தல் மற்றும் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ளதைப் போன்று மாநில நெடுஞ்சாலைகளிலும் ரோந்துப் பணி மற்றும் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பல பிரம்மாண்டமான, முக்கியமான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற உள்ளதால், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், துடிப்புடனும் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித் துறை அரசுச் செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குநர் (TNRSP) தெ.பாஸ்கர பாண்டியன், அரசு அலுவலர்கள், துறைகளின் தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/engineers-should-work-with-utmost-care-and-vigor-minister-adhav-arjuna




