கொச்சி, மலையாள திரைப்பட நடிகர் சங்கமான 'அம்மா' (AMMA- Association of Malayalam Movie Artists)-வில் இருந்து நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தங்களது முடிவுக்கான காரணங்களை விளக்கும் வகையில் இருவரும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 1994-ல் தொடங்கப்பட்ட நடிகர் சங்கம் மலையாள திரைப்பட கலைஞர்களின் நலனுக்காக 1994-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பே 'அம்மா'. மலையாளத் திரையுலகில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் உரிமைகள், நலன் மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அமைப்பைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு 'அம்மா' அமைப்பின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர், நடிகைகள் அமைப்பில் இருந்து விலகி வருகின்றனர். "எங்கள் ராஜினாமா அவசர முடிவு அல்ல" இந்த நிலையில், 'அம்மா' அமைப்பில் விலகுவதாக நடிகைகள் ரேவதி மற்றும் பத்மபிரியா வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "'அம்மா' அமைப்பைச் சுற்றியுள்ள மற்றொரு சர்ச்சையாக இதை பார்க்கக் கூடாது. எங்கள் ராஜினாமா அவசரத்திலோ அல்லது தனிப்பட்ட சம்பவத்தினாலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக பாதுகாப்பான பணிச்சூழல், கண்ணியம், பொறுப்புக்கூறல் மற்றும் சமமான அணுகுமுறை ஆகியவற்றை மட்டுமே வலியுறுத்தி வந்தோம். ஆனால், அதற்கு பதிலாக மௌனமும் புறக்கணிப்பும் மட்டுமே கிடைத்தது. இருந்தாலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "ஹேமா கமிட்டிக்குப் பிறகும் மாற்றம் இல்லை" மேலும், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு சிலர் ராஜினாமா செய்தது கொள்கை ரீதியான முடிவு அல்ல என்றும், பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே அது இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகார அமைப்புகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள புதிய வழிகளை தொடர்ந்து உருவாக்கிக் கொள்கின்றன. முகங்களும் நடைமுறைகளும் மாறினாலும், ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கட்டமைப்புகள் மாறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நடிகர்களின் கூட்டுக்குரலாக இருக்க வேண்டிய 'அம்மா' அமைப்பு, காலப்போக்கில் ஆணாதிக்கம் மற்றும் அதிகார அரசியலால் அதன் அடிப்படை நோக்கங்களை இழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, "எங்களின் வெளியேற்றம் தோல்வி அல்ல; அது எங்கள் சுயமரியாதையைப் பாதுகாக்கும் முடிவு. சமத்துவமான மலையாள திரைப்படத் துறைக்கான எங்கள் பயணம் தொடரும். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/revathi-and-padmapriya-quit-the-amma-organization-a-series-of-allegations-leveled-in-a-joint-statement




