சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது – காவல்துறையின் உதவியோடு விளைநிலங்களை பறிக்கும் தவெக அரசின் விவசாய விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனஹொந்தி வரை 340 கி.மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வரும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரின் மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்த தவெக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் விளைநிலங்களின் வழியே எண்ணெய் குழாய்கள் அமைக்கப்படுவதால், நிலத்தின் பயன்பாடு, நிலத்தடி நீர், விவசாய உற்பத்தி என பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க மறுத்து, அவர்களின் போராட்டத்தை ஒடுக்க தவெக அரசு கையாண்டிருக்கும் அடக்குமுறை, ஆணவம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். கடந்த ஆட்சிக்காலங்களில் இதே திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய தொடர் போரட்டங்களின் விளைவாக எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், காவல்துறை உதவியுடன் விளைநிலங்களை வலுக்கட்டாயமாக பறிக்க முற்படுவது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் தவெக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையின் படி சாலையோரமாகவோ அல்லது நெடுஞ்சாலைகளின் ஓரமாகவோ எண்ணெய் குழாய்களை பதிக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-seizing-agricultural-lands-with-police-assistance-ttv-dhinakaran-condemns-the-move




