Full artikkel
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இப்போது 'லிங்கம்' வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வெளிவந்த 'லிங்கம்' கதையைத் தழுவி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. கதிர், திவ்யபாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சீரிஸுக்கு 'விலங்கு' பிரசாந்த் பாண்டியராஜ்தான் ஷோ ரன்னர். இயக்குநராகியிருக்கும் லக்ஷ்மி சரவணக்குமாருக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டுப் பேட்டி கண்டோம். Lingam Web Series நம்மிடையே பேசியவர், "வசந்தபாலன் சாருடன் 'அரவான்', 'காவியத் தலைவன்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அங்கிருந்துதான் எனது சினிமா பயணம் தொடங்கியது. இன்று அந்தப் பயணம் 'லிங்க'த்தை எட்டியிருக்கிறது. இயக்குநர் சங்கர் சாருடன் இணைந்து கொஞ்ச நாள் ஸ்கிரிப்ட் வேலைகளில் பணியாற்றினேன். சினிமாவுக்குள் நாம் எவ்வளவு வருடங்கள் வேலை பார்த்தாலும், ஒரு படத்தை நாமே இயக்கும்போதுதான் சினிமா நமக்கு முழுமையாகப் புரியத் தொடங்குகிறது. ஏனெனில், அங்குதான் எல்லா முடிவுகளையும் நாமே எடுக்க முடிகிறது. ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வேலை என்பது நல்ல கதை எழுதுவதோ அல்லது நல்ல ஷாட்களை வைப்பதோ மட்டும் அல்ல. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதும்தான். இப்போது 'லிங்கம்' வெப் சீரிஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில், ஜூனியர் விகடனில் வெளியான எனது 'இரண்டாம் ஆட்டம்' தொடரைத்தான் வெப் சீரிஸாக எடுப்பதாக இருந்தது. ஆனால், ரீஜனல் கதைகளுக்கு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்க ஓடிடி நிறுவனங்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. இந்தித் தொடர்களுக்கு உலகளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால் அங்கு தாராளமாகச் செலவு செய்கிறார்கள். தமிழில் அந்த மார்க்கெட் ஓபன் ஆக இன்னும் சில வருடங்கள் எடுக்கலாம். Lakshmi Saravanakumar - Lingam அப்படியான சமயத்தில் விகடனிடம் 'லிங்கம்' கதையின் உரிமம் இருந்ததால் அவர்களே இதை இயக்கக் கேட்டார்கள். எந்தத் தப்பும் செய்யாத ஒரு சாமானியன், சூழ்நிலைகளின் காரணமாக எப்படிக் குற்றவாளியாக மாறுகிறான் என்ற புள்ளியைக் கொண்டது இக்கதை. " என்றவர், "ஒரு எழுத்தாளராக சினிமாவுக்குள் வரும்போது, உலகத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு மிகவும் சீரியஸான படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசைதான் முதலில் இருக்கும். 2014-15-ல் அப்படியொரு கதையைப் படமாக்க முயன்றேன். ஆனால், அது சரியாக வரவில்லை. அதன்பின், 'தகப்பன் கொடி' என்ற கதையைத் தயார் செய்து இயக்குநர் சங்கர் சாரிடம் சொன்னேன். அவருக்கு அந்தக் கதை பிடித்துப்போக 'எஸ் பிக்சர்ஸ்' மூலமாகவே இதனைச் செய்யலாம் என்றார். ஆனால், அந்தத் திட்டம் அப்போது தள்ளிப் போனது. அதே நேரத்தில், கிட்டத்தட்ட அதே பின்னணியைக் கொண்ட 'பரியேறும் பெருமாள்' திரைப்படமும் ரிலீஸானதால், அந்தப் பட முயற்சியைக் கைவிட்டுவிட்டேன். Lakshmi Saravanakumar - Lingam பின்னர், கோவிட் பேரிடர் காலத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான குடும்ப மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதுதான் 'இரண்டாம் ஆட்டம்' தொடரை எழுதினேன். அந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் ஒரு மருத்துவமனையில் வைத்து அக்கதையின் முதல் இரண்டு எபிசோடுகளை எழுதினேன். என்னிடம் பலரும் "உங்களுடைய நாவல்களை ஏன் நீங்களே படமாக்கக் கூடாது?" எனக் கேட்பதுண்டு. எனது 'உப்புநாய்கள்' நாவல் வந்தபோது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அதைப் படமாக்கக் கேட்டார். 'கானகன்' நாவலையும், 'கொமோரா' நாவலையும் பல இயக்குநர்கள் கேட்டார்கள். 'இரண்டாம் ஆட்டம்' தொடர் வரும்போதே இயக்குநர் பாலா சார் உள்ளிட்ட பலரும் கேட்டனர். ஆனால், இப்போது அந்தக் கதையிலிருந்து சிலவற்றைக் காட்சிகளாகச் சில படங்களில் பயன்படுத்திவிட்டார்கள்." என்றார். மேலும் தொடர்ந்தவர், "லிங்கத்திற்குப் கபடி மீது அத்தனை ஆர்வம் உண்டு. அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்புகூட கபடி சார்ந்து பல விஷயங்களில் ஈடுபட்டு வந்தார். கபடி பிளேயர் மணத்தி கணேசனும் லிங்கத்திடமிருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகச் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்." என்றவர், "இந்த லிங்கம் கதாபாத்திரத்திற்கு எனது முதல் சாய்ஸ் கதிர்தான். 'பரியேறும் பெருமாள்' படத்தில் வரும் சாதுவான கதிரையும், அவரது முதல் படமான 'மதயானைக் கூட்டம்' படத்தில் வரும் கதிரையும் என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மூலமாகத்தான் கதிரிடம் கதையைக் கொண்டு சேர்த்தேன். கதிரும் மிகக் கச்சிதமாக அந்த நெல்லை-குமரி வட்டார மொழி வழக்கைக் கற்றுக்கொண்டு கேரக்டருக்குள் இறங்கிவிட்டார். Lakshmi Saravanakumar - Lingam அதேபோல், லிங்கத்தின் நண்பராக வரும் கதாபாத்திரத்தில் 'அமரகாவியம்' சத்யா (எ) சாஹிரை நடிக்க வைக்கத் தேர்வு செய்தோம். இப்படி நேர்த்தியாக பணிகளை மேற்கொள்ளக்கூடிய நடிகர்கள் குழு எனக்குக் கிடைத்தது. ஷோ ரன்னர் பிரசாந்த் பாண்டியராஜ் மூலமாக நான் நினைப்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல தொழில்நுட்பக் குழுவினரும் கிடைத்தார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இந்த சீரிஸில் விமல், பால சரவணன் ஆகியோர் வருவதால் அது 'விலங்கு' சீரிஸின் கிராஸ் ஓவர் என நினைக்கிறார்கள். அப்படி கிடையாது. அக்கதாபாத்திரங்கள் பற்றி இரண்டாவது சீசனில் இன்னும் விரிவாகச் சொல்லப்படும்." என்றார் உற்சாகத்துடன். முழு பேட்டி கீழே... முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




