அனைவருக்கும் பசுமை வணக்கம்! டெல்டா மாவட்டங்களில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 12 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கத் தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், விவசாயிகளையும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் பல மடங்கு கூடுதலாக ஆற்று மணலை அபகரித்தன. இதனால் ஆற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் மிக மோசமான நிலைக்குச் சென்றது. கடல்நீர் உட்புகத் தொடங்கியது. கடற்கரையோரக் கிராமங்களில் மட்டுமல்லாது கல்லணையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளிலும்கூட நிலத்தடி நீரில் உப்புத்தன்மை ஏற்பட்டுள்ளது. அந்த நீரைப் பாசனம் செய்தால் பயிர்கள் கருகிப்போவதாக அந்தப் பகுதி விவசாயிகள் அபயக் குரல் எழுப்புகிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. ஆற்றின் தரைமட்டம் பல அடிகள் இறங்கியுள்ளதால், கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்குச் சரியாகப் போய்ச் சேர்வதில்லை. குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்காமல் கடைமடைப் பகுதி விவசாயிகள் அல்லல்பட்டு வருகிறார்கள். மணல் குவாரிகளை மூடக்கோரி விவசாயிகள் எவ்வளவோ போராடியும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஓராண்டுக்கு முன்பு, அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் தொடர்ந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் காரணமாக மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஆனால், தற்போதைய த.வெ.க அரசு டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மணல் குவாரிகளைத் திறக்க இருப்பதாக வரும் தகவல்களால் மீண்டும் பிரச்னை தொடங்கிவிட்டது. ‘சட்டப்படி அனுமதிக்கப்படும் அளவை விட, கூடுதலாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்க, செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்போம்’ என ஆட்சியாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குப்படியே, புதிய குவாரிகள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 2.74 கோடி யூனிட் மணல் அள்ளப்பட உள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 36 மடங்கு அதிகம். டெல்டாவில் மீண்டும் மணல் கொள்ளைக்குத் தமிழக அரசே கம்பளம் விரிப்பது, காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளைப் பள்ளத்தாக்குகளாக மாற்றும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகும். கட்டுமானத் துறை மணல் தேவைக்கு தமிழக அரசு மாற்றுவழிகளை ஆராய வேண்டும். மணல் குவாரி திட்டத்தை அரசு நிரந்தரமாகக் கைவிடுவதுதான், மக்களுக்குச் செய்யும் நன்மை! - ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/agriculture/government/editorial-page-august-10-2026




