சென்னை, நாடெங்கிலும் உள்ள 2.43 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் அம்பலமாகி உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- சுப்ரீம்கோர்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழு சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கை, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் உயர்கல்வித் துறை எத்தகைய இருண்ட படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பதற்கான பகிரங்க சான்றாக அமைந்துள்ளது. உயர்கல்வி வளாகங்களில் பயிலும் மாணவர்களின் மனநலம் மற்றும் தொடரும் தற்கொலைகள் குறித்து நாடெங்கிலும் உள்ள 2.43 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வில், அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. தற்கொலை எண்ணம் ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 9 சதவீதம் பேர் தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்வதாகவும், 15 சதவீதம் பேர் கடுமையான மன உளைச்சல் மற்றும் பதற்றத்தில் தவிப்பதாகவும், 34 சதவீதம் பேர் கல்வி வளாகங்களுக்குள் வேற்று நபர்களாகப் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மிக முக்கியமாக, இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 67 சதவீதம் பேர் பட்டியல் சாதிகள் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) சமூகங்களைச் சேர்ந்த எளிய குடும்பத்துப் பிள்ளைகள் ஆவர். இத்தகைய தீவிர மன அழுத்தச் சூழலிலும், நாட்டின் 32 சதவீத உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வழிகாட்ட அடிப்படை மனநல ஆலோசனைக் (Counselling) கட்டமைப்புகளே இல்லை என்பது நிர்வாகங்களின் அலட்சியத்தைக் காட்டுகிறது. சாதிய ஒடுக்குமுறை பா.ஜ.க. ஆட்சியமைந்த காலகட்டத்திலிருந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தற்கொலை விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 30.02 ஆகக் கடுமையாக அதிகரித்துள்ளது. மோடி அரசின் கடந்த பத்தாண்டுகளில் மாணவர் தற்கொலைகளின் எண்ணிக்கை 61 சதவீதத்திற்கும் மேல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது! குறிப்பாக, 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து மட்டும் 13,600-க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மாணவர்கள் பாதியிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிலையங்களில் நீட் (NEET), ஜே.இ.இ. (JEE) நுழைவுத்தேர்வு ரேங்க்களைக் காட்டி நடக்கும் கொடூரமான சாதிய ஒடுக்குமுறைகளும், பாலியல் துன்புறுத்தல்களும் மாணவர்களைத் தற்கொலை விளிம்பிற்குத் தள்ளுகின்றன. கார்ப்பரேட் வணிக கூட்டாளிகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதிலோ அல்லது கல்வி வளாகங்களை ஜனநாயகப்படுத்துவதிலோ மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மாறாக, கல்வித்துறையைத் தனது கார்ப்பரேட் வணிக கூட்டாளிகள் கல்லாகட்டுவதற்கான ஒரு வணிகக் களமாக மாற்றி, அவர்களுக்கு லாபம் ஈட்டித் தருவதிலேயே இந்த அரசு முழு முனைப்புடன் செயல்படுகிறது. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களை சமூக அநீதியும், பாகுபாடும் நிறைந்த கூடாரங்களாக மாற்றி, இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. மோடி அரசின் துரோகம் இதைத்தான் நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உரக்கச் சொல்லி வருகிறார். இன்று சுப்ரீம்கோர்ட்டின் அறிக்கை மூலம் மோடி அரசின் துரோகம் உலகறிய நிரூபணமாகியுள்ளது. மாணவர்களுக்குத் தேவை தரமான கல்விச் சூழலும், கண்ணியமான வேலைவாய்ப்புகளுமே தவிர, சாதிய ஒடுக்குமுறையும், தற்கொலைக்குத் தள்ளும் மன அழுத்தமும் அல்ல. எளிய சமூக மாணவர்களின் உயிரைப் பலிகொடுத்து, தன் வணிகக் கூட்டாளிகளின் நலனை மட்டுமே முன்னிறுத்தும் பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி வளாகங்களில் நிகழும் சாதியப் பாகுபாடுகளுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைத்து, மாணவர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் மத்திய அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/national-task-force-report-the-modi-governments-betrayal-has-been-proven-to-the-world-manickam-tagore



