மதுரை மாவட்டம், தெற்குத் தொகுதி, வார்டு எண் 71, மண்டலம் 3 பகுதியில் சேர்மன் முத்துராமையர் சாலையில் மதுரை மாநகராட்சியின் ஜோசப் பூங்கா கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு (AMRUT – Atal Mission for Rejuvenation and Urban Transformation) புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் திட்டத்தின் மூலமாக பணிகள் தொடங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம். நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி, முறையான கழிவுநீர் மேலாண்மை, மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட சின்னக் கண்மாய், கீழ்மதுரை, காமராசபுரம், பாலரெங்கபுரம், இந்திரா நகர்ப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்குக் குடிநீர் ஆதாரமாக இப்பூங்காவில் உள்ள மாநகராட்சியின் இரு மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைந்துள்ளன. இப்பூங்கா திறக்கப்பட்ட பிறகு, அப்பகுதி வாழ் சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், முதியோர்கள் என ஏராளமானோர் காலையிலும் மாலையிலும் விளையாட்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு பூங்காவைப் பயன்படுத்தி வந்தனர். கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வரத்து தடைபட்டு, பூங்கா பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. மர்ம நபர்களால் விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கம்பிகள் என அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தன. மதுப்பிரியர்கள் கூடும் இடமாக பூங்கா மாறியது. மது பாட்டில்கள் உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்த பொதுமக்கள், பூங்காவுக்கு வருவதையே தவிர்க்க ஆரம்பித்தனர். இது குறித்து அங்கே சிலம்பக்கலை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரிடம் கேட்டபோது, “என் வீடு இப்பூங்காவிலிருந்து ஐந்து தெரு தள்ளிதான் இருக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் பூங்காதான் எங்கள் மைதானம். பள்ளி முடிந்து சாயங்காலம் ஏழு மணி வரைக்கும் இங்குதான் இருப்போம். விடுமுறை விட்டால் போதும் இங்கு வந்துவிடுவோம். அதற்குப் பிறகு கொரோனா ஊரடங்கு வந்தது. அப்பப்போ இந்தப் பக்கம் வந்து போவது உண்டு. ஐந்து வருடங்களாக இப்படியேத்தான் கிடக்கிறது. அப்போது விளையாடிய பசங்க யாரும் இப்போது இல்லை. இருந்த விளக்குகள் எல்லாம் உடைந்து கிடக்கின்றன. நாங்கள் விளையாடிய ஊஞ்சல், சறுக்கு மரம் எதையும் இப்போது காணவில்லை. பாதியாக உடைந்து, இருந்த இடம் தெரியாமல் இன்று இருக்கிறது. நிறைய பெற்றோர்கள், குழந்தைகள், முதியவர்கள் வருவார்கள். ஆனால் இப்போது யாரும் பெரிதாக இங்கு வருவதில்லை. நானும் எங்கள் சிலம்பக்கலை பயிற்சிப் பட்டறை மாணவர்கள் 60க்கும் மேற்பட்டோரும் கடந்த 2 மாதங்களாக இந்தப் பூங்காவில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பூங்காவைச் சீரமைப்பு செய்து மாணவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக, பாதுகாப்பான இடமாக மாற்றிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றார். இப்பூங்காவைச் சுற்றி திருமண மண்டபங்கள், கோவில், குடியிருப்புகள் மற்றும் பூங்காவிற்குப் பின்புறம் பள்ளி, மருத்துவமனை என பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டு இடங்கள் நிறைந்திருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பூங்காவினை மறுசீரமைப்பு செய்து, உரிய பராமரிப்போடும் பாதுகாப்பான சுற்றுச்சூழலோடும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதிவாழ் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/neglecting-urban-spaces-the-revival-request-for-madurais-joseph-park




