சென்னை, அரசு துவங்க இருக்கும் புதிய மருந்தியல் கல்லூரிகளில் தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரசு துவங்க இருக்கும் புதிய மருந்தியல் கல்லூரிகளில் தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிக்க உள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் மருந்தியல் பட்டப்படிப்பு படிப்புக்கான 10 புதிய மருந்தியல் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை எண்: 263, கடந்த 16- ந்தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்தியல் கல்லூரிகள் தருமபுரி, விருதுநகர், கோயமுத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட உள்ளன. தற்காலிக பணியிடங்கள் புதிய மருந்தியல் கல்லூரிகளை தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி உள்ளார். அந்த, மருந்தியல் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் சுமைகளும் அரசுக்கு ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்காகும். வேலையில்லாமல் ஏராளமானோர் தவிக்கும் சூழலில், புதிய வேலை வாய்ப்புகளை நிரந்தர அடிப்படையில் உருவாக்காமல், தற்காலிக அடிப்படையில் உருவாக்கி, பணி நியமனங்களை செய்வது ஏற்கத்தக்கதல்ல. இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மருந்தியியல் கல்லூரி ஆசிரியர்களையும், பணியாளர்களையும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை, வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/pharmacy-college-faculty-posts-should-be-made-permanent-communist-party-of-india-insists




