சென்னை, ஆன்லைன் லாட்டரி தமிழகத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி கேரள மாநில லாட்டரியை விற்பனை செய்வது தெரியவந்தால் கைது நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதிர்ஷ்டக் காற்றில் பறக்க நினைக்கும் சிலரை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல்கள் தற்போது புதிய வலையை விரித்துள்ளன. அண்டை மாநிலமான கேரளத்தில் லட்டரிக்கு தடையில்லை. அங்கு தாராள விற்பனை நடக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள், தமிழகத்திலும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சில பிரத்யேக செயலிகள் மூலம், 'கேரள லாட்டரி’ எங்களிடம் ஆன்லைனில் கிடைக்கும்; வீட்டில் இருந்தபடியே கோடிஸ்வரன் ஆகலாம்' என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். இரட்டை ஆபத்து இதை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் உழைத்த பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி ஏமாற்றம் அடைகின்றனர். ஒரு முறை பணத்தை அனுப்பிவிட்டால், அந்த எண்களுக்குப் பரிசு விழுந்தாலும் சரி, விழாவிட்டாலும் சரி, அனுப்பிய பணத்தையோ அல்லது பரிசுத் தொகையோ திரும்பப் பெறவே முடியாது. இப்படி பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள், செய்வதறியாது சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களை நோக்கி புகார் கொடுக்கச் செல்கின்றனர். தமிழகத்தில் சட்டப்படி லாட்டரி சீட்டு வாங்குவதும், விற்பதும், கைவசம் வைத்திருப்பதும் குற்றமாகும். இதனால், 'ஆன்லைன் லாட்டரியில் பணத்தை இழந்துவிட்டேன்' என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்பவர்கள் மீதும் சட்டம் பாயும் சூழ்நிலை ஏற்படுகிறது. தடை செய்யப்பட்ட ஒரு பொருளை வாங்க முயன்றதே குற்றம் என்பதால், புகார் கொடுக்க வருபவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பணத்தையும் இழந்து, வழக்கிலும் சிக்கினால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பமே பாதிக்கப்படும் என்பதால், போலீசார் மனிதாபிமான அடிப்படையில் தற்போதைக்கு வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். மாறாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரைகளை கூறுவதோடு, எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர். சைபர் கிரைம். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைன் லாட்டரி என்பது ஒரு ஏமாற்று வேலை. அதில் விழும் எண்கள் அனைத்தும் மோசடி கும்பலால் போலியாக உரு வாக்கப்படுபவை. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலமாக கூட அதனை வாங்குவது சட்டப்படி குற்றமாகும். எனவே, பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற மோசடி வலைகளில் சிக்கிப் பறி கொடுக்க வேண்டாம். பணத்தையும் இழந்து விட்டு, வழக்கிலும் சிக்கிக் கொள்ளும் நிலைமை உருவாகும்' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/double-jeopardy-with-online-lottery-cybercrime-police-warn




