சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- பட்டமளிப்பு விழா திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடுவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார். பெரும் அநீதி இந்த விழாவில், முதலில், 'வந்தே மாதரம்', அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாட வேண்டும் என்று, கவர்னர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என். சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்துவது, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி. மன்னிப்பு கேட்க வேண்டும் "மாநில கவர்னர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், முதலில், 'வந்தே மாதரம்' அடுத்து, 'தேசிய கீதம்', மூன்றாவதாக, மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும்" என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவமதிக்கப்பட இதுவே காரணம். இந்த உத்தரவை திரும்பப் பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' என்றாலே பாஜகவுக்கும், அமித்ஷாவுக்கும் வேப்பங்காயாக கசக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. இப்போது, அந்த வரிசையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் சேர்ந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழ்நாடு, எப்போதும் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், மாநில உரிமைகளை உயிருக்கு மேலாக போற்றி வரும் மாநிலம் தமிழ்நாடு. இதை அமித்ஷா உணர்ந்து கொள்வது நல்லது. மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை துச்சமென மதித்து அதிகார அத்துமீறலில் ஈடுபடும் அமித்ஷாவின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கவர்னரின் பின்னால் ஒளிந்து கொண்டு, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அவமானம் இழைக்க நினைக்கும் அமித்ஷாவின் செயலை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், கவர்னர் உரையின்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. அதே நடைமுறையை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும், இனிவரும் அரசு விழாக்கள் அனைத்திலும் பின்பற்ற வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் இதுதான். அதை மத்திய பாஜக அரசும், அமித்ஷாவும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளோடு, மீண்டும் மீண்டும் விளையாடினால், அதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். அது மிகக் கடுமையானதாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/graduation-ceremony-tamil-thai-vazhthu-song-should-be-sung-first-manikkam-tagore




