Full artikkel
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்களிடம் தூய்மைப் பணிக்கான ஆலோசனைகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனிடையே, கடந்த 21-ம் தேதி சென்னையில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 22-ம் தேதி அடுத்தடுத்து ஈரோடு மாநகராட்சி, மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசின் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தவெக அரசின் இந்த முடிவை கூட்டணியில் இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்டக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளான தி.மு.க. தே.மு.தி.க-வும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கடந்த ஆட்சியின் தொடர்ச்சியா? கடந்த தி.மு.க ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணி வேகமாகத் தனியார்மயமாக்கப்பட்டு வந்த சூழலில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 4,800 தொழிலாளர்களையும் தனியார் நிறுவனங்களின் கீழ் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களைக் காலங்காலமாக இருந்தது போல மாநகராட்சி ஊழியர்களாகவே நீட்டிக்கக் கோரியும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் சுமார் 1,400 தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 'உழைப்போர் உரிமை இயக்கம்' முன்னெடுத்த இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர்கள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தொடக்கத்தில் தோல்வியிலேயே முடிந்தன. அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தொழிலாளர்கள் கடலிலும், கூவம் ஆற்றிலும் இறங்கித் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர். மேலும், பெண் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர். போராட்டத்தின் விஸ்வரூபத்தைக் கண்டு இறங்கிவந்த அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி அறநிலையத் துறை அமைச்சராக இருந்த சேகர்பாபுவை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே நேரில் அனுப்பி வைத்தது. ஸ்டாலின் அங்குப் பேசிய சேகர்பாபு, ``நீங்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்லர். எங்களைப் பொறுத்தவரை தாய்மைப் பணியாளர்கள். நீங்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்களாகவே தொடர்வீர்கள். இந்த மாத இறுதிக்குள் அனைவரும் பணிக்குத் திரும்புவீர்கள்'' என்று உறுதியளித்தார். அமைச்சரின் இந்த உறுதிமொழியை ஏற்று, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களைத் தொழிலாளர்கள் தற்காலிகமாகக் கைவிட்டனர். ஆனால் தற்போதைய த.வெ.க அரசு மீண்டும் தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக அரசின் மூர்க்கத்தனமான நகர்வு! இது குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாரதியிடம் பேசினோம். அவர், ``சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிப்பறை வசதிகள் கூட இல்லாத அவலம் நீடிக்கிறது. கடுமையான வெயில் காரணமாக அண்மையில் ஞானகுமார், பார்த்திபன் உட்பட மூன்று தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். வெயில் காலத்தில் போடுவதற்கு ஏதுவாக தடிமனான யூனிஃபார்ம்களை மாற்ற வேண்டும், வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், மாஸ்க் மற்றும் கிளவுஸ் வழங்க வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு தயாராக இல்லை. மாறாக, மூன்று மண்டலங்களில் குப்பை தேங்குவதாகச் செய்திகளைப் கசியவிட்டு, பழிவாங்கும் நோக்கில் அந்த மண்டலங்களையும் தனியாருக்கு மாற்ற அதிகாரிகள் மட்டத்தில்திட்டமிட்டு, தொழிலாளர்களை அரசு பயமுறுத்துகிறது. கு.பாரதி ஆட்சிக்கு வந்தால் தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்கும் என நம்பிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த ஆட்சியிலாவது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார்மயப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்கள். இந்த அரசு வந்த 40 நாளிலேயே முடிவெடுத்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கூட அவர்களுக்கு முழுதாக சென்று சேர்வதில்லை. திரைத்துறையினரை சந்திப்பதில் மட்டுமே ஆர்வம்! எட்டு தலித் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதனால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கும் சமூக நீதியும் சமத்துவமும் கிடைத்துவிடாது. இந்த அரசு அனைத்தையும் தனியார்மயப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதன் மூர்க்கத்தனமான நகர்வே தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கையை செவிமடுக்காதது. வி.சி.க, சிபிஐ, சிபிஎம், தே.மு.தி.க போன்ற கட்சிகள் தூய்மைப் பணியாளர்கள் பிரச்னை குறித்துக் குரல் எழுப்பின. சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கும் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி தொழிலாளர் நலன் மற்றும் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து தற்போதைய முதல்வரின் உரையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எங்களைச் சந்தித்துப் பேசக் கோரி கடிதம் கொடுத்தும், எளிய மக்களின் போராட்டம் குறித்து பேசவோ, சந்திக்கவோ முதல்வருக்கு நேரமில்லை. ஆனால், பன்னாட்டு முதலாளிகளையும், திரைத்துறையினரையும் சந்திப்பதில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டுகிறார். விஜய்க்குத் தெரியாமல் தான் இதெல்லாம் நடக்கிறது என்று கூறுவதெல்லாம் வெறும் கண் துடைப்புதான். சட்டமன்றத்தில் நேரடியாகக் கேள்வி எழுப்பப்படும் போதே விஷயம் திசைதிருப்பப்படுகிறது. மேலும், நியாயமான உரிமைகளைக் கேட்பவர்களை 'திமுக-வின் ஆட்கள்' என்று முத்திரை குத்தி, சமூக வலைத்தளங்களில் கேவலமாக அவதூறு பரப்புவது மிக மோசமான அரசியல் நாகரிகம். கருத்துரிமை, போராடும் உரிமை ஆகியவை நசுக்கப்பட்டு, ஒரு போலீஸ் ஆட்சியை நோக்கி நாடு செல்கிறதோ என்ற பயம் எழுகிறது. தொழிலாளர்களைத் தனியாருக்கு அடிமையாக்க நினைத்தால், கடந்த முறையைப் போலவே கூவத்திலும் சுடுகாட்டிலும் இறங்கிப் போராட எதற்கும் துணிந்து தயாராக இருக்கிறோம்." என்றார். தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா இந்த அரசு? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under



