கூடலூர்: லாட்டரி சீட்டில் பரிசு விழாத ஆத்திரத்தில், அந்த லாட்டரி சீட்டை விற்ற பெண் வியாபாரியை வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் லாட்டரி விற்பனை தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதனால் தமிழக எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பலரும் கேரளாவுக்கு சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 42) என்பவர் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஓணம் பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் தனக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று சிவகுமார் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், லாட்டரி குலுக்கல் முடிந்தபோது அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. வியாபாரி மீது ஆத்திரம் இதனால் ஏமாற்றம் அடைந்த சிவகுமார், தான் லாட்டரி சீட்டு வாங்கிய கடையின் வியாபாரி மீது ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து வயநாடு நென்மேனி பகுதிக்கு சென்ற அவர், லாட்டரி சீட்டை விற்ற வினிதா (32) என்பவரிடம், தனக்கு பரிசு விழாதது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சிவகுமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து வினிதாவை சரமாரியாக குத்தியுள்ளார். பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர் இந்த கத்திக்குத்தில் வினிதாவின் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணுக்கு தீவிர சிகிச்சை இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த வினிதா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாட்டரி சீட்டில் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில், அதனை விற்ற பெண் வியாபாரியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் வயநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/didnt-get-a-prize-in-the-lottery-youth-arrested-for-stabbing-female-shopkeeper




