Full artikkel
மனிதவளத்துறை அமைச்சர் கில்லி சரத்தான் கடந்த நான்கு நாட்களாக சமூகவலைதளங்களின் ஹாட் டாபிக். சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளை பயன்படுத்துவதை போல அவர் வெளியிட்டிருந்த வீடியோ, இப்போது இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அமைச்சர் சரத் அமைச்சரை பதவி நீக்கக்கோரி திமுக மாணவரணியும் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்நிலையில், தவெக முகாமுக்குள்ளும் அமைச்சர் விவகாரம் புயலை கிளப்பியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர், 'போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக முதல்வர் காலையில் மாரத்தான் ஓடி அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அமைச்சர் கில்லி சரத்தின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி கட்சி மீதும் முதல்வர் மீதும் கடும் விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டது. முதல்வர் விஜய் வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கிறேன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய்யை வேறு ஊற்றிவிட்டார் அமைச்சர். விவகாரம் இணையத்தில் படு வைரலாக விஷயம் முதல்வரின் கவனத்தையும் எட்டியிருக்கிறது. அவரே அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடிந்து கொள்ளவும் செய்திருக்கிறார். முதல்வரின் கடும் அப்செட்டை வைத்துதான் சரத்தை அமைச்சரவையிலிருந்து நீக்க போகிறார்கள் எனும் கருத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. உடனடியாக பதறிப்போன சரத், மனைவி குழந்தையோடு க்ரீன்வேஸ் சாலையில் உள்ள 'செண்பகம்' இல்லத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து பேசியிருக்கிறார். 'விளையாட்டாய் செய்ததை வேண்டுமென்றே பெரிதுப்படுத்தி அரசியல் ஆக்குகிறார்கள். தளபதியிடம் எடுத்துக்கூறுங்கள்' என மனம் வருந்தி பேசியிருக்கிறார். ஆனால், பொதுச்செயலாளர் சரத்திடம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது. புஸ்ஸி ஆனந்த் 'விஷயம் தளபதிக்கிட்ட போயிருச்சு. அவர் எடுக்குறதுதான் முடிவு!' என கறாராக கூறியிருக்கிறார். எங்கே தனது பதவி பறிபோய்விடுமோ...என்கிற பரிதவிப்பில் செண்பகம் இல்லத்தை விட்டு கிளம்பினார் சரத். அதற்கேற்றார் போல கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் சரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு கூடுவாஞ்சேரியில் முதல்வர் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக சரத் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், தலைமையின் உத்தரவின் பேரில் அவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை' என்றனர். மேலும் பேசியவர்கள், 'திமுக இந்த விவகாரத்தை கையிலெடுத்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறது. இந்த நேரத்தில் சரத் மீது நடவடிக்கை என இறங்கினால் அரசியல்ரீதியாக அவர்களின் கை ஓங்கிவிடும். அதனால் 2-3 மாதங்கள் கழித்து அமைச்சரவை மாற்றத்தை செய்யும் போது பார்த்துக் கொள்ளலாம் என முதல்வர் தரப்புக்கு சீனியர்கள் சிலர் அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் இறுதி முடிவு முதல்வரின் கையிலேயே இருக்கிறது' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




