திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவம், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 15-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை 5-வது நாளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பகவானை வழிபட்டனர். விழாவின் 6-ம் நாளில் அனுமந்த வாகன சேவை, தங்கத் தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவை நடைபெற்றது. ஏழாம் நாள் சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று காலை ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்), அஸ்வ வாகன சேவை (குதிரை வாகனம்) நடைபெற்றது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக கோவில் தெப்பக்குளத்தில் (சுவாமி புஷ்கரணி) சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலையிலேயே பக்தர்கள் குவியத் தொடங்கினர். தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை 'பல்லக்கு உற்சவம்' நடைபெற்றது. பின்னர் காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை, ஸ்ரீ பூவராக சுவாமி கோவிலின் முக மண்டபத்தில், வைகானச ஆகம மரபுகளின்படி உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு 'ஸ்நாபன திருமஞ்சனம்' எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, விஷ்வக்சேன ஆராதனை, புண்யாஹவாசனம், முகப் பிரக்ஷாலனம் (திருமுக மண்டலத்தைத் தூய்மைப்படுத்துதல்), தூப-தீப-நைவேத்தியம் மற்றும் ராஜ உபசாரங்கள் உள்ளிட்ட சடங்குகள் ஆகம விதிமுறைகளின்படி நடத்தப்பட்டன. 'ஸ்நாபன திருமஞ்சனம்' சடங்கிற்குப் பிறகு, சுதர்சன சக்கரத்தாழ்வார் புனித நீராடலுக்காகப் புஷ்கரணிக்கு (கோவில் திருக்குளம்) எழுந்தருளச் செய்யப்பட்டார். அங்கு சக்கரத்தாழ்வாரை மூன்று முறை திருக்குளத்தில் மூழ்கச் செய்து புனித நீராட்டு நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திருகுளத்தில் புனித நீராடினர். தீர்த்தவாரியில் பங்கேற்று புனித நீராடி மகிழ்ந்த பக்தர்கள் இந்நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, மற்றும் தேவஸ்தான வாரிய உறுப்பினர்கள், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, இணை நிர்வாக அதிகாரிகள் டாக்டர் ஏ.சரத் மற்றும் பிரபலா கோபிநாத், தலைமை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்பி எல்.சுப்பாராயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/tirumala-brahmotsavam-concludes-with-chakrathazhwar-theerthavari




