திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், மகேப்பேறு வார்டில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் தாய்மார்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும், மருத்துவர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் கவனிக்க மறுப்பதாகவும், தகாத சொற்களால் திட்டி அலட்சியப்படுத்துவதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் பரபரக்கின்றன. மேலும், ``பி.வி எனப்படும் பிறப்புறுப்புப் பரிசோதனையை தகுதியில்லாத மற்றும் போதிய பயிற்சி இல்லாத சாதாரண பணியாளர் செய்வதால் காயம், ரணம் மற்றும் கடுமையான தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. தவறான அழுத்தத்தால் குழந்தையைப் பாதுகாக்கும் பனிக்குடம் முன்கூட்டியே உடைந்துவிடுகிறது. பிரசவத்தில் சிக்கலையும் ஏற்படுத்துகிறது’’ என்று கர்ப்பிணிப் பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இது தொடர்பாக, பிரசவத்துக்காக மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணிப் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவர், `` `பி.வி பரிசோதனை பண்றேன்’னு சொல்லிட்டு, ரெஸ்பான்சிபில் இல்லாமல் அத்தனை முறைப் பண்றாங்க. இதனால, பிறப்பு உறுப்பே எனக்கு புண்ணாயிடுச்சு. `சர்ஜரி பண்ணிடுங்க’னு நானே சொல்லிட்டேன். இத்தனைக்கும் நானும் ஸ்டாஃப் நர்சு தான். பிரசவத்துக்காக வந்த நிறையப் பேரை வெளியே தரையில படுக்க வச்சிருக்காங்க. ஒரு அக்காவுக்கு பனிக்குடம் உடைஞ்சு குழந்தை தலை வெளியே வந்துடுச்சு. `வந்து சீக்கிரமா பாருங்க’னு சொன்னாலும், `அதெல்லாம் ஒண்ணுமில்ல போமா’னு சொல்றாங்க. ரொம்ப கேவலமா டிரீட் பண்றாங்க’’ என்றுகூறி ஆதங்கப்பட்டிருந்தார். அந்த கர்ப்பிணியுடன் வந்திருந்த உறவினரான பெண் ஒருவரும் வீடியோவில் பேசியிருந்தார். ``இந்த அரசு மருத்துவமனையில எந்தவொரு கவனிப்பும் இல்லை. அட்டெண்டரும் இல்லை. எல்லோரும் கதை பேசுக்கிட்டிருக்கிறாங்க’’ என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த வீடியோ வைரலானதால், மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடுப்பாகியிருக்கிறார்கள். வீடியோவில் பேசியிருந்த கர்ப்பிணியின் உறவினரை அழைத்து கட்டாயப்படுத்தி புதிய வீடியோவையும் வெளியிடச் செய்திருக்கிறார்கள். புதிய வீடியோவில், ``பொறக்கிற குழந்தைகளை நல்லா பாத்துக்கிறாங்க. பிரசவிக்கிற தாய்மார்களை கவனிக்கிறதுலதான் சின்னச் சின்ன பிரச்னை இருக்கிற மாதிரி தெரிஞ்சது. ஒரு ஆதங்கத்துல வீடியோல பேசிட்டேன்’’ என்று பேசும் நிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டிருக்கிறார். வீடியோ வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் இந்த விவகாரம் பற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் எட்வினா வசந்தா விளக்கமொன்றையும் செய்தியாளர்களிடம் அளித்திருக்கிறார். அதாவது, ``மகப்பேறு வார்டில் 8 படுக்கைகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு நாளைக்கு சிசேரியன் 12, நார்மல் 25 என ஏறக்குறைய 40 பிரசவங்கள் வரை நடக்கிறது. யாருக்கு வலி வருகிறதோ, அவர்களை முன்னுரிமை அடிப்படையில் படுக்கையில் அனுமதிக்கிறோம். பாதிக்கப்பட்டதாகக் கூறி வீடியோ வெளியிட்ட கர்ப்பிணிப் பெண்ணின் புகார் பற்றி விசாரிக்கப்படும். உண்மைத்தன்மை கண்டறியப்படும். இதற்கு முன்பு இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை யாரும் சொன்னதில்லை’’ என்று கூறியிருக்கிறார். ``முதல்வரின் இந்த விளக்கமும் ஏற்புடையதாக இல்லை’’ என்கிறார்கள் திருவண்ணாமலை மாவட்ட மக்கள். சமீபத்தில் மட்டும், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றனர். கடந்த வாரம்கூட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துவந்த பெண் ``ஓ.பி சீட்டு கொடுக்காமல் மருத்துவப் பணியாளர்கள் எல்லோரும் கதைப் பேசிக்கிட்டு இருக்கிறாங்க. இன்னும் சிலர் மொபைல் பார்க்கிறாங்க. டாக்டரிடம் போய் சொன்னாலும் திமிராக நடந்துகொள்கிறார்கள்’’ என்று ஆதங்கத்துடன் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளை களைய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கவனம் செலுத்தி விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/government-and-politics/pregnant-woman-lodge-complaint-against-tiruvannamalai-government-medical-college-hospital




