சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சட்டை இல்லாமல் துண்டைப் போர்த்திக்கொண்டு நுழைந்த முதியவர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கிறார்கள். தான் ஒரு யாசகர் என்றும் மக்களிடம் யாசகம் மூலம் பெறப்பட்ட தொகையை மக்களுக்கே வழங்கும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை அனுமதித்துள்ளனர். ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து 10 ஆயிரம் ரூபாயை வழங்கியிருக்கிறார். புல் பாண்டி இது குறித்து தெரிவித்த அந்த முதியவர், "நான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த புல் பாண்டியன். 75 வயதாகிறது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி சரஸ்வதி இறந்துவிட்டார். தனிமையில் இருந்த நான் கடந்த 40 வருடங்களுக்கு மேல் ஆக மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் யாசகம் பெற்று வருகிறேன். எனக்கு இவ்வளவு தொகை தேவையில்லை. சேவைக்காக எனது பணத்தை வழங்க எண்ணினேன் அதன்படி ஒவ்வொரு மாதமும் யாசகம் பெறும் பணத்தை அந்தந்த மாவட்டத்தில் வழங்கி வருகிறேன். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் எனது யாசக பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்காக பொது நிவாரண நிதிக்கு வழங்கினேன். அது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 470 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்காக யாசக பணத்தை அளித்தேன். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பணத்தை வழங்கி வருகிறேன். கடந்த மாதம் கோவையில் யாசகம் பெற்ற பத்தாயிரம் ரூபாயை இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்க வந்துள்ளேன். கடந்த 40 வருடங்களாக ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். தொடர்ந்து யாசகம் பெற்று தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மக்களின் சேவைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவேன்" எனக் கூறியுள்ளார். 75 வயதான முதியவர் ஒருவர் மக்களிடம் யாசகம் பெரும் பணத்தைச் சேமித்து மீண்டும் மக்களுக்கே வழங்கி வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/features/human-stories/old-man-gave-collecting-funds-gave-cm-relief-fund




