தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி வேன் டிரைவரை, அந்தப் பெண்ணே தைரியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணிடம் பாலியல் சீண்டல் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் (வயது 23). இவர் கயத்தாறில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் 35 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார். தன்னை காப்பாற்றிக் கொண்டதுடன், அந்த வாலிபரை வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வேன் டிரைவர் கைது இச்சம்பவம் குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வேன் டிரைவர் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-school-van-driver-arrested-for-entering-house-and-sexually-assaulting-woman




