புவனேஸ்வர், பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. இளைஞர்களின் எழுச்சி மிகவும் தீவிரமாக இருந்ததால் தர்மேந்திர பிரதான் கடந்த 25-ந்தேதி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.இந்த நிலையில் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? என்று தர்மேந்திர பிரதான் 2 வாரங்களுக்கு பிறகு விளக்கம் அளித்துள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ஜி.எம். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:- தவறாக வழி நடத்தினர் ‘ஜென் சி’ தலைமுறையை சேர்ந்தவர்கள் நமது குழந்தைகள். அவர்களை சிலர் தவறாக வழி நடத்த முயன்றனர். அப்போது எனக்கு தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இருக்கவில்லை.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 2 கோடி குழந்தைகள் பிறக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு பல லட்சியங்கள் உள்ளன. அவர்கள் இந்தியாவை உலக வழிகாட்டியாக மாற்றுவார்கள்.இதனால் எனக்கு அந்த பதவி (மத்திய மந்திரி) முக்கியம் இல்லை. இளைஞர்களை தவறாக வழிநடத்த முயற்சிகள் நடந்ததால் நான் பதவி விலகினேன். மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது நான் பதவி விலக முன்வந்தேன்.இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார். விவசாயியின் மகன் ரைராகோலில் நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் அவர் பேசியதாவது:-எனக்கு எதிராக ஒடிசாவில் பிஜூ ஜனதா தள தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். என்னை திரும்பிச் செல்லுமாறு முழக்கங்களை எழுப்பினார்கள். நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் என்னை திரும்பிப் போகச் சொன்னாலும் நான் மீண்டும் வருவேன்.பிஜூ ஜனதா தள தலைவர் (நவீன் பட்நாயக்) எனக்கு எதிராக இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிட்டார். அவர் என்னை ஒடிசா மக்களுக்கு ஒரு அவப்பெயர் என்றும், ஒரு மோசமான நபர் என்றும் குறிப்பிட்டார். அவப்பெயர் ஏற்படுத்தவில்லை ஒடிசா மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நான் எப்போதாவது ஏதாவது செய்து இருக்கிறேனா? (கூடி இருந்தவர்கள் இல்லை என்று உரத்த குரலில் பதில் அளித்தனர்.)நான் மாநிலத்துக்கு பெருமை சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் எனது செயல்பாடுகளால் மக்களுக்கு ஒரு போதும் அவப்பெயர் ஏற்படுத்தியது இல்லை. மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.ஜெகன்னாதர் மற்றும் சம்பல்பூரின் காவல் தெய்வமான சமலேஸ்வரி தேவியின் ஆசியுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மந்திரியாக பதவி ஏற்றேன்.இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார். பதிலடி தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு பிஜூ ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக சம்மல்பூர் மாவட்ட தலைவரும் முன்னாள் மந்திரியுமான ரோகித் புஜாரி கூறும்போது, ‘யாரும் தர்மேந்திர பிரதானை அவமதிக்கவில்லை. அவர்தான் அத்துமீறல்கள் மூலம் அவரது கட்சியும், அரசும்தான் அவரை அவமானப்படுத்தின. அவரை நவீன் பட்நாயக் ஏன் அவமதிக்க வேண்டும்? அவரால் 21 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.அவரை யாரும் அவமதிக்க தேவையில்லை. அவரே தன்னை அவமதித்துக் கொண்டார். பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைதான் தர்மேந்திர பிரதானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது’ என்றார்.ஒடிசாவைச் சேர்ந்த தர்மேந்திர பிரதான் சம்மல்பூர் தொகுதி எம்.பி. ஆவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/why-did-he-step-down-as-education-minister-dharmendra-pradhan-explains




