சென்னை, பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்களில் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வகச் சோதனைகளில், சேகரிக்கப்பட்ட பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்துள்ளது. அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த அப்பளம் மற்றும் வத்தல் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளத்தை விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. கலர் அப்பளத்தை அடிக்கடி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம். பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம். நீண்ட நாட்களாக இந்தச் செயற்கை நிறமிகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தத் தரம் குறைந்த சாயங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வளாகங்களில் இந்த கலர் அப்பளங்களை விற்பனை செய்ய கூடாது. தயாரிப்பாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். விதிகளுக்கு புறம்பாக நிறமூட்டிகளை பயன்படுத்தி அப்பளம் விற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அடர் நிறமுள்ள அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-colored-appalam-banned-in-tamil-nadu




