திருமலை, ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசல் முக மண்டபத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறும். இதற்காக தங்க சர்வபூபால வாகனத்தில் கிருஷ்ணரை எழுந்தருள செய்து நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படும். உக்ர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடத்தப்பட்டு, துவாதசாராதனம் நடைபெறும். நாளை மறுநாள் (சனிக்கிழமை) உறியடி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். மாலை 4 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் மலையப்ப சுவாமி தங்க திருச்சியிலும், கிருஷ்ணர் மற்றொரு திருச்சி வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வருகின்றனர். இதையொட்டி அன்று ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை கோகர்பம் அணை அருகிலுள்ள பூங்காவில், திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை சார்பில் காளியமர்த்தனரான கிருஷ்ணருக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை பஞ்சாபிஷேகம் நடைபெறும். திருப்பதி கோசாலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண சாலையில் (கோசாலை), நாளை கோகுலாஷ்டமி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் வகையிலும், கோ-பூஜை மற்றும் கோ-சேவை ஆகியவற்றின் சிறப்புகளைப் பரப்பும் வகையிலும் பல்வேறு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோகுலம் போன்று அலங்காரம் கோகுலத்தைப் போன்று அழகான சூழலை உருவாக்கும் வகையில், கோசம்ரக்ஷண சாலை மாவிலைத் தோரணங்கள், மலர்கள் மற்றும் பிற பாரம்பரிய அலங்கார பொருட்களால் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. அங்கு பராமரிக்கப்படும் பசுக்களும் சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. பக்தர்கள் பசுக்களுக்கு வெல்லம், அரிசி மற்றும் கால்நடைத் தீவனம் ஆகியவற்றை வழங்கி 'கோ சேவை'யில் பங்கேற்கலாம். 'கோ மாதா'விற்குச் சேவை செய்வதற்கான இந்த உன்னதமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆன்மீக நிகழ்ச்சிகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் துவக்கமாக காலை 5 மணிக்கு ஸ்ரீ வேணுகோபாலசுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 6 மணிக்கு புல்லாங்குழல் இசையும், காலை 7.30 மணிக்கு வேத பாராயணமும் நடைபெறும். காலை 8 மணிக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகித்ய திட்டக் கலைஞர்கள் பஜனை மற்றும் கோலாட்ட நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் ஸ்ரீ ஹரி சங்கீர்த்தனங்களை நிகழ்த்துவார்கள். காலை 10 மணிக்கு ஸ்ரீ வேணுகோபாலசுவாமி சன்னதியில் கோபூஜை மற்றும் சிறப்பு ஆரத்தி நடைபெறும். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கிருஷ்ணரின் திருவிளையாடல்களை விளக்கும் ஹரிகதா மாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவிளையாடல்கள் மற்றும் கோ சேவையின் (பசு சேவை) சிறப்பம்சங்களை விளக்கும் வகையிலான ஹரிகதா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று, கோபூஜை மற்றும் கோ சேவையின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் கோமாதாவின் அருளைப் பெறுமாறு தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. தேவஸ்தான கோவில்களில் விழா இதேபோல் திருச்சானூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில், கபில தீர்த்தத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், நாராயணவனத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஆகிய கோவில்களிலும் கோகுலாஷ்டமி விழாக்கள் நடைபெற உள்ளன. விழாவிற்காக விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஸ்னாபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, வாகன சேவை, கோ பூஜை, கோகுலாஷ்டமி ஆஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் பாரம்பரிய முறைப்படி நடைபெறும். பாரம்பரியமான 'உட்லோத்ஸவம்' (உறியடித் திருவிழா) நாளை மறுநாள் நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/gokulashtami-asthanam-on-september-4-at-tirumala




