புதுச்சேரி, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் கிராமத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. செங்கழுநீர் அம்மன் கோவில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. தினசரி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. இரவில் பல்வேறு விதமான வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு செங்கழுநீர் அம்மன் மற்றும் அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் செங்கழுநீர் அம்மன் தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. ரங்கசாமி பங்கேற்பு சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை போற்றி முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்தனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், மாடவீதி வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி வீராம்பட்டினம் மீனவ கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பார்க்கும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டம் வங்கக் கடல் அலை போல் காணப்பட்டது. கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக காணப்பட்டது. தேரோட்டத்தில் புதுச்சேரி, தமிழக பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்திருந்த பக்தர்களுக்கு அரியாங்குப்பம் முதல் வீராம்பட்டினம் வரை பல்வேறு தரப்பினர் நீர்மோர், அன்னதானம் மற்றும் சமபந்தி விருந்து வழங்கினர். நாளை தெப்ப உற்சவம் தோரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். செங்கழுநீரம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் நாளை இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. 21ஆம் தேதி இரவு 10 மணி அளவில் முத்துபல்லக்கில் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/devotional/puducherry-sengazhuneer-amman-temple-aadi-festival-therottam




