சென்னை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் தலையிடும் வலிமையோடு இருந்த காலத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசு, குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தில் ஒப்புக் கொண்டபடி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - 2005 நிறைவேற்றியது. வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகள், கிராம சபா கூட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புத் திட்டங்களை உருவாக்க அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெறுவதற்கான சட்டபூர்வ உரிமை பெற்றிருந்தன. கடந்த 2006 முதல் 20 ஆண்டுகளாக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களுக்கு, எந்தவொரு ஆண்டிலும் 100 நாள் முழுமையாக வேலை வழங்கவில்லை என்பதே உண்மையாகும். தமிழ்நாட்டில் கடந்த 2021- 2022 முதல் 2025- 2026 வரையான ஐந்தாண்டு காலத்தில் 43 நாள் முதல் 52 நாள் வரையிலும் தான் வேலை வழங்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்ட மொத்தத் தொழிலாளர்களில் ஐந்து விழுக்காடு தொழிலாளர்கள் கூட 100 நாட்களுக்கு முழுமையாக வேலை வாய்ப்பை பெறவில்லை என்பது அரசின் தரவுகள் வெளிப்படுத்தும் உண்மையாகும். இந்த நிலையில், ஊரகப் பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களின் வேலை பெறும் சட்ட உரிமையை பறித்து விட்டு, அரசையும், ஆளும் தரப்பையும் சார்ந்து இருக்கும் பயனாளிகளாக விவசாயத் தொழிலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரில் சட்டம் இருப்பதை விரும்பாத, காந்தியின் மீதும், அவரது கருத்தியல் மீதும் தீரா வெறுப்பும், பகையும் கொண்டுள்ள பாஜக கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, விபி ஜி ராம்ஜி - திட்டம் 2025 யை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 125 நாள் வேலை வாய்ப்புக்கு உறுதியளிப்பதாக வாய்ச்சவடால் முழங்கி வருகிறது. பாஜகவின் 125 நாள் வேலை வாய்ப்பு என்பது கானல் நீரை காட்டி, தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறும் ஏமாற்றுத்தனமாகும். பாஜக கூட்டணி மத்திய அரசு ஊரகப் பகுதித் தொழிலாளர்களை ஏமாற்றுவதுடன், மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, அதன் தலையில் நிதிச் சுமையை ஏற்றியுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு 2026- 27ம் நிதியாண்டில் விபி ஜிராம்ஜி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ரூ.12,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதம், அதாவது ரூ.5,056 கோடி தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு அரசு எங்கிருந்து நிதி ஒதுக்கும்? தற்போது திட்டப் பணியில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள சுமார் 90 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டை பெற்றுள்ளன. இவற்றில் 69.79 லட்சம் குடும்பங்கள் திட்டப் பணியில் வேலை செய்து வருகின்றன. இந்த 69.79 லட்சம் குடும்பங்களுக்கு தலா 125 நாள் வேலை வழங்க வேண்டும் எனில், ரூபாய் 30,096 கோடி நிதி தேவையாகும். இது, வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் செலவிற்கான தொகை மட்டும்தான். இது தவிர திட்டப் பணிகளுக்கான பொருட்கள் வகைப்பட்ட முதலீட்டு செலவுகள் உள்ளன. இவைகள் எதையும் கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு வெறும் ரூ 12,642 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது, மாநில அரசின் தேவையில் 40 விழுக்காடாகும். திட்டச் செலவில் 60 விழுக்காடு நிதியை குறைத்து விட்டு, மாநில அரசின் தலையில் நிதிச் சுமையை ஏற்றுவது, மாநில அரசுகள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலாகும். இந்த மாதம் (ஜூலை) முதல் தேதியில் இருந்து அமலாக்கத்திற்கு வந்துள்ள விபி ஜி ராம்ஜி திட்டப்பணிக்கு, பாஜக மத்திய அரசு ரூ. 95,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ 25,000 கோடி ஒதுக்கீடு செய்ததில், தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக வெறும் ரூ 2,176.84 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சிறு நிதியை வைத்துக் கொண்டு 125 நாள் வேலையும், வேலை செய்யும் நாளுக்கு தலா ரூ.345 ஊதியமும் தரப்படும் என்பது முற்றிலும் தவறான, அப்பட்டமான பொய் என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்ந்து கொள்ள முடியும். இதனை உணர்ந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், விபி ஜி ராம்ஜி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி, கடந்த 01.07.2026ம் தேதி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் பல விபரங்களை குறிப்பிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், முதல்-அமைச்சரின் வேண்டுகோளையும் ஏற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தவும், வேலை அட்டை பெற்றுள்ள குடும்பங்களில் உள்ள ஆண், பெண் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் தலா 125 நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் 100 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய அரசையும், பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-fund-for-125-days-of-work-in-the-vp-g-ramji-scheme-communist-party-of-india-question




