வர்த்தகம், ராணுவம், தொழில்நுட்பம் என 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபுறம். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி, ஆயிரம் ஆண்டுகால சரித்திர உறவை மீட்டெடுக்கும் ஒரு மகா முயற்சி மறுபுறம்! பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியப் பயணம், வெறும் அரசு சார்ந்த நிகழ்வாக மட்டும் முடிவடையவில்லை; இருபெரும் நாடுகளின் கலாச்சார ஆன்மாவை இணைக்கும் ஒரு வரலாற்றுத் தருணமாகவும் மாறியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளான நேற்று (ஜூலை 8), இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் இணைந்து, யோகியாகர்த்தாவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பிரம்பானான் ஆலயத்தை பார்வையிட்டார். இது வெறும் சுற்றுலாப் பயணம் அல்ல. கால வெள்ளத்தில் சிதைந்து, மௌனத்தில் ஆழ்ந்திருந்த அந்த மாபெரும் ஆலய வளாகத்தை புனரமைக்கும் மாபெரும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஆம், ஆயிரம் ஆண்டு கால சரித்திரம் இந்தியக் கரங்களால் மேம்படப் போகிறது. பிரம்பானான் ஆலயம் இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி, "நண்பர்களே, அதிபர் பிரபோவோவுடன் இணைந்து பிரம்பானான் ஆலயப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த ஆலயம், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகிறது," என்று உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார். சரித்திரத்தின் சாட்சியம் பிரம்பானான்! கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பானான், இந்தோனேசியாவின் மிகப்பெரிய இந்து ஆலய வளாகமாகும். ரக்காய் பிகடன் மற்றும் ரக்காய் பலிதுங் ஆகிய இரு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த வளாகம், ஒற்றைக் கோயில் அல்ல; சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 240 ஆலயங்களின் பிரம்மாண்டமான தொகுப்பு. இதன் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த விகாரமான போரோபுதூர், அக்கால ஜாவாவில் இந்து மதமும் பௌத்தமும் எவ்வளவு அமைதியாகவும், இணக்கமாகவும் தழைத்தோங்கின என்பதற்கு அமைதியான சாட்சியாக நிற்கிறது. 1991-ல் யுனெஸ்கோ அமைப்பு, இதன் ஈடு இணையற்ற கலாச்சார மதிப்பிற்காகவும், கட்டிடக்கலை அற்புதத்திற்காகவும் இதை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. பிரம்பானான் ஆலயம் காதலுக்காகப் பிறந்த ஆலயமும், ஒரு சாபமும்! இந்த ஆலயத்தின் பின்னே ஒரு சுவாரஸ்யமான ஜாவானிய புராணக் கதையும் உண்டு. பண்டங் போண்டோவோசோ என்ற இளைஞன், ரோரோ ஜொங்க்ராங் என்ற இளவரசியின் மீது காதல் கொண்டான். ஆனால், அந்த காதலை ஏற்க மறுத்த இளவரசி, ஒரே இரவில் 1000 சிலைகளுடன் ஒரு கோயிலை எழுப்பினால் அவனை மணப்பதாக நிபந்தனை விதித்தாள். பூதங்களின் உதவியுடன் அந்த அசாத்தியமான பணியை போண்டோவோசோ கிட்டத்தட்ட முடித்துவிட்டான். 999 சிலைகள் தயாரான நிலையில், போலியாக விடியலை போல ஒரு தோற்றத்தை உருவாக்க, கிராம மக்களை அரிசி குத்தவும், தீ மூட்டவும் பணித்தாள் இளவரசி. ஏமாற்றப்பட்ட போண்டோவோசோ, கோபத்தில் அந்த இளவரசியையே ஆயிரமாவது சிலையாக மாறும்படி சபித்ததாக அந்த கதை கூறுகிறது. இன்றுவரை அந்த சாபத்தின் சாட்சியாக அந்தச் சிலை இருப்பதாக நம்பப்படுகிறது. 47 மீட்டர் உயரமுள்ள சிவன் ஆலயத்தின் சுவர்களில் காணப்படும் சிற்பங்கள், இந்தியாவையும் இந்தோனேசியாவையும் இணைக்கும் ஆழமான பிணைப்பை பறைசாற்றுகின்றன. வால்மீகியின் ராமாயண காவியத்தின் காட்சிகள் மிக நுணுக்கமாக இங்கே வடிக்கப்பட்டுள்ளன. ராமனின் பிறப்பு முதல் ராவண வதம் வரை, ஒரு காவியமே இங்கே கற்களில் உயிர்பெற்று நிற்கிறது. மீட்டெடுக்கும் இந்திய தொல்லியல் துறை! பத்தாம் நூற்றாண்டில் கைவிடப்பட்டு, பின்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் சிதைவுக்கு உள்ளான இந்த ஆலயத்தை மீட்டெடுக்கும் பணி எளிதானதல்ல. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) நிபுணர் குழு, கடந்த மார்ச் மாதம் இங்கு ஆய்வு மேற்கொண்டது. சிதறிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கற்களை எடுத்து, அவை எந்த ஆலயத்திற்கு உரியவை எனக் கண்டறிந்து, மீண்டும் அதே இடத்தில் பொருத்தும் 'அனஸ்டைலோசிஸ்' (anastylosis) என்ற நுட்பமான முறையில் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கட்டுமானப் பணி அல்ல; சரித்திரத்தின் சிதறிய பக்கங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் சவால். பிரம்பானான் ஆலயம் பிரம்பானான் ஆலயப் புனரமைப்பு என்பது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. இது இந்தியாவின் 'கலாச்சார தந்திரோபாயம்'. இதற்கு முன்னரே, வியட்நாமின் 'மை சன்' சரணாலயம் (2014), மியான்மரின் பூகம்பத்தால் சேதமடைந்த பாகன் வலய நினைவுச் சின்னங்கள் (2017), கம்போடியாவின் அங்கோர் வாட், லாவோஸின் வாட் ஃபூ சிவன் கோயில் என ஆசியாவின் பல சரித்திரச் சின்னங்களை இந்தியா தனது கரங்களால் மீட்டெடுத்துள்ளது. இது, வர்த்தகத்தையும் ராணுவத்தையும் தாண்டி, பகிரப்பட்ட பாரம்பரியத்தின் மூலம் உறவுகளைப் பலப்படுத்தும் இந்தியாவின் மென் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் என்பதைத் தாண்டி, இருபெரும் கலாச்சாரங்கள் தங்களின் வேர்களைக் கண்டறிந்து கொண்டாடும் ஒரு திருவிழாவாக வரவேற்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/literature/culture/pm-modi-indonesia-prambanan-hindu-temple-restoration-project




