சென்னை, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் கடைசி தூண் வார்ப்புப் பணி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய உள்கட்டமைப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொது ஆலோசகரான AEON Consortium மற்றும் ஒப்பந்த நிறுவனமான HCC-KEC Consortium ஆகியவற்றுடன் இணைந்து, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம்-5-ல் ECV-03 திட்டத்தின் கீழ் மேடவாக்கம்-1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 25 மீட்டர் உயரமுள்ள கடைசி தூணின் (தூண் P814) வார்ப்புப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சவாலானப் பகுதிகள் உள்ளகரம் மெட்ரோ நிலையத்திலிருந்து எல்காட் மெட்ரோ நிலையம் வரை உள்ள இந்த 11.3 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் மொத்தம் 513 பெரிய அடித்தளத் தூண்கள் (piers) அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2351 தூண்கள் (Piles) அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மிகவும் சவாலானப் பகுதிகளில் ஒன்று, மேடவாக்கம் கூட்டுச் சாலை அருகிலுள்ள தூண் P879 முதல் செம்மொழிச் சாலையில் உள்ள தூண் P868 வரையிலான பகுதியாகும். இப்பகுதியில் அமைக்கப்பட்ட தூண்கள் இந்தப் பிரிவிலேயே மிக உயரமானவை ஆகும்; இவற்றின் அதிகபட்ச உயரம் சுமார் 29 மீட்டர். இரும்பு இணைப்புப் பாலம் இந்தப் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ வழித்தடமானது, ஏற்கனவே உள்ள மேடவாக்கம் மேம்பாலத்திற்கு மேலே சுமார் 29 மீட்டர் உயரத்தில் கடந்து செல்கிறது. மேலும், 125 மீட்டர் ஆரம் கொண்ட கூர்மையான வளைவுப் பாதையில் 57 மீட்டர் நீளமுள்ள இரும்பு இணைப்புப் பாலம் (Steel Girder Span) அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் ரீதியான சவாலை மேலும் அதிகரிக்கும் விதமாக, மேடவாக்கம்-1 மற்றும் மேடவாக்கம்-2 ஆகிய மெட்ரோ நிலையங்களும் இந்தப் பகுதியில் சாலை மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன. முக்கியமான மைல்கல் அதிக மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளில் இத்தகைய சிக்கலான கட்டுமானங்களை மேற்கொள்வது பெரும் சவாலாக இருந்தது. குறிப்பாக, போக்குவரத்தை மாற்றி அமைப்பது, பயன்பாட்டில் உள்ள மேம்பாலத்திற்கு மிக அருகிலும் அதற்கு மேலேயும் பணிகளைப் பாதுகாப்பாக நிறைவேற்றுவது ஆகியவை பிரதான சவால்களாக இருந்தன. துல்லியமான திட்டமிடல், சிறப்பான ஒருங்கிணைப்பு மற்றும் சீரான செயல்பாடுகளின் மூலம் இந்தச் சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டன. தற்போது 513-வது மற்றும் கடைசித் தூணான P814-ன் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்திருப்பது, இத்திட்டத்தின் முக்கியமான ஒரு மைல்கல்லாகும். மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், இணைப் பொது மேலாளர் ஆர். சீனிவாசன், AEON Consortium நிறுவனத்தின் குழுத் தலைவர் சி. முருகமூர்த்தி, குடியிருப்புப் பொறியாளர் ஜி. சுரேஷ் கண்ணன், HCC-KEC கூட்டமைப்பின் திட்ட மேலாளர் லாலிச்சன் ஆண்டனி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், AEON மற்றும் HCC-KEC ஆகிய நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். தூண் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்கும் வகையில், U-girder அமைத்தல் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-metro-rail-project-phase-2-casting-of-the-final-pillar-on-corridor-5-completed



